பக்கம்:தாய்லாந்து.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ருநாள் பாங்காக்கில் குரான் ஓதும் போட்டி நடந்தது. அப்போட்டியைக் காண இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் கிளம்பினார்கள்.

புறப்படும்போது ‘நானும்’ என்றார் சுந்தர். “சரி, புறப்படு!” என்றார் ஹுமாயூன். லுங்கியும் குல்லாயும் அணிந்து கொண்ட சுந்தர் நெற்றியில் விபூதியும் பூசிக் கொண்டு உற்சாகத்தோடு புறப்பட்டு விட்டார்!

அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது நாங்கள் சிரித்துவிட்டோம். மத நல்லிணக்கத்தின் ஒரு சின்னமாகக் காணப்பட்ட சுந்தரை அப்போது நம் ஊர் பாரதீய ஜனதா கட்சி பார்க்காமல் போனார்களே என்று வருத்தமாயிருந்தது!

தாய்லாந்துக்குப் போய் வந்து ஸயாம் அரிசி பற்றிச் சொல்லாவிட்டால் திருமணப் பத்திரிகையில் மணமக்கள் பெயர் விட்டுப் போன மாதிரி ஆகிவிடும் தாய்லாந்தின் பூர்விகப் பெயர்தான் ஸயாம். அந்தப் பெயர் இப்போது அரிசியில் மட்டுமே ஒட்டிக் கொண்டுள்ளது. ஸயாம் அரிசி உலகப் பிரசித்தமானது. அதன் வெண்மையோ திண்மையோ, ருசியோ வேறு எந்த நாட்டு அரிசிக்கும் வராது. பாசுமதியெல்லாம் அதற்கப்புறம்தான் அடுத்த ஜென்மம் என்று ஒன்று உண்டென்றால் நான் தாய்லாந்தில் பிறக்கவே விரும்புகிறேன். இத்தனை ருசியான அரிசியும், இளநீரும், ஆரஞ்சு ஜூஸும் அமைதியான ஆட்சியும் உள்ள நாட்டை விட்டு விட்டு வேறு எந்த நாட்டில் பிறக்கத் தோன்றும்!

சாலையில் போகும்போது அந்த நாட்டின் விளை நிலங்களை வழி நெடுகப் பார்த்துக் கொண்டே போனேன். தலையில் தொப்பி அணிந்த உழவர்கள் எந்த நேரமும் நடவு நட்டுக் கொண்டிருந்தார்கள். சிற்சில இடங்களில் பெருமளவில் கரும்பு சாகுபடி நடந்து கொண்டிருந்தது.

தாய்லாந்துக்காரர்களுக்கு அரிசி வெறும் உணவு மட்டுமல்ல. அதை ஒரு தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

நெல்லையோ அரிசியையோ கீழே சிந்தினால் அவர்களுக்கு மிகுந்த கோபம் வந்துவிடுமாம். ஒரு குழந்தை கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டு வயிற்றுவலி என்று சொல்லி அழக்கூடாதாம். அப்படி அழுதால் அது அரிசியைப் பழிப்பதாகுமாம்.

93
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/91&oldid=1075281" இருந்து மீள்விக்கப்பட்டது