பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

83


நல்லபடியாகவே பழகுகிறான்; அனைவரும் அவனிடம் தமாஷாகப் பேசுகிறார்கள். அவனுக்குக் கஷ்டமாய் மிகவும் கஷ்டமாய்த் தானிருக்கிறது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை.”

“அதுதான் சரி” என்று பேச ஆரம்பித்தான் ரீபின். “நம்மையெல்லாம் சோகம்தான் மூடிப் போர்த்தியிருக்கிறது; நாம் சோகத்துக்குள் தான் இருக்கிறோம். இருந்தாலும், சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்துகொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள். அதுதான் சங்கதி! நாம் முட்டாள்தனமாயிருந்தால், நாம்தான் அதன் பலாபலனை அனுபவித்துத் தீர வேண்டும்!”

12

விலாசவ் குடும்பத்தின் சின்னஞ் சிறிய வீட்டின்மீது மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தக் கவனத்தால் அவர்களது மனத்திலே சிறுசிறு சந்தேகங்களும், காரண காரியம் தெரியாத பகைமை உணர்வும் ஏற்பட்டாலும்கூட, ஏதோ ஓர் இனந்தெரியாத நம்பிக்கை நிறைந்த ஆர்வக் குறுகுறுப்பும் ஏற்படத்தான் செய்தது. சில சமயங்களில் யாராவது ஒருவன் பாவெலைச் சந்தித்து அவனைச் சிரத்தையோடு பார்த்துக்கொண்டு. கேட்பான்:

“தம்பி! நீ புத்தகங்களையெல்லாம் படிக்கிறாய். உனக்குச் சட்டங்களெல்லாம் தெரியும். அப்படியென்றால் எனக்கு இதை விளக்கிச் சொல்லேன்....”

அவன் சொல்லுகின்ற விஷயம் போலீஸின் அநியாயத்தைப் பற்றியோ, அல்லது தொழிற்சாலை நிர்வாகத்தின் அநீதியைப் பற்றியோதான் இருக்கும், மிகவும் சிக்கலான விஷயமானால் தனக்குப் பழக்கமான நகரத்து வக்கீல் ஒருவருக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்து அனுப்புவான் பாவெல். ஆனால், அவனது சக்திக்கு உட்பட்டதாயிருந்தால், அவனே அதற்குரிய சட்ட விஷயங்களை விளக்கிச் சொல்லுவான்.

வரவர ஜனங்கள் சிரத்தையுள்ள இளைஞனை மதிக்கத் தொடங்கினார்கள். எளிமையாகவும் துணிவாகவும் பேசிய இந்தப் பலசாலியான இளைஞனை எதையும் கூர்ந்து கவனித்து, காது கொடுத்துக் கேட்கும், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்று ஆராயும்