பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மக்சீம் கார்க்கி


உணர்ச்சிமயமான கொதிப்படைந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டும் திரண்டு ஓடி வந்தார்கள். ஓய்ந்து களைத்த அவர்களது உள்ளங்களில் பதுங்கிக்கிடந்த அதிருப்தி உணர்ச்சி உயிர் பெற்றெழுந்து. போக்கிடம் தேடி முட்டி மோத ஆரம்பித்தது. எனவே அந்த அதிருப்தி உணர்ச்சி தனது அகன்ற இறக்கைகளை வீசியடித்து மேலே பறந்தெழுந்தவாறு தன்னோடு அந்த மக்களையும் கட்டிப் பிணைத்து இழுத்தோடிக்கொண்டு, அவர்களை ஒருவருக்கொருவர் மோதிச் சாடவிட்டுக்கொண்டு, வெற்றிகரமாக வெளிப்பட்டது. அந்த உணர்ச்சியினால், அவர்கள் மனத்தில் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சுவாலை வீசிக் கனன்றது. ஜனசமுத்திரத்துக்கு மேலாக புகைக்கரியும் செந்தூளும் பறந்து கவிந்தன. அவர்களது உணர்ச்சிவசப்பட்ட முகங்களில் வியர்வை பூத்து மினுமினுத்தது: கன்னங்களில் கறுத்த வியர்வை நீர் வழிந்திறங்கியது; அவர்களது கரிய முகங்களில் கண்களும் பற்களும் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிட்டன.

சிஸோவும் மாகோதினும் நின்றிருந்த இரும்புக் குவியலின் மீது பாவெலும் ஏறி நின்றான்.

“தோழர்களே!” என்று அவன் கத்தினான்.

அவனது முகம் எவ்வளவு தூரம் வெளுத்துப்போய்விட்டது. உதடுகள் எப்படி நடுங்குகின்றன என்பதையெல்லாம் தாய் கவனித்துக்கொண்டிருந்தாள். தன்னையுமறியாமல், அவள் கூட்டத்தினரை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறிச் சென்றாள்.

“யாரம்மா நீ? ஏன் இப்படி இடித்துக்கொண்டு போகிறாய்?” என்று அவளை நோக்கி எரிந்து விழுந்தார்கள் தொழிலாளர்கள்.

அவர்களும் அவளைப் பதிலுக்கு இடித்துத் தள்ளினார்கள். என்றாலும் அதனாலெல்லாம் அவள் பின் தங்கிவிடவில்லை. தோளாலும், கையாலும் இடித்து மோதிக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு அவள் முன்னேறினாள்; தன்னுடைய மகனுக்குப் பக்கத்தில் சென்று தானும் நிற்கவேண்டும் என்ற உணர்ச்சியே அவளை உந்திப் பிடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறச் செய்தது.

‘தோழர்களே’ என்ற அந்த வார்த்தை அவனது நெஞ்சிலிருந்து வெடித்துப் பிறந்தபோது.. அவனைப் பொறுத்தவரையில் பரிபூரண அர்த்த பாவம்கொண்டிருந்த அந்த வார்த்தையைச் சொன்னபோது அவனது தொண்டைக்குழி போராட்ட உணர்ச்சியின் ஆனந்த வெறியால் அடைபட்டுத் திணறுவதுபோலிருந்தது. உண்மையாலும், உண்மையைப் பற்றிய கனவுகளாலும் கனன்றெரிந்துகொண்டிருந்த