பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

93


“தொழிற்சாலை தர்ம ஸ்தாபனம் அல்ல! நீங்கள் அனைவரும் இப்போதே வேலை செய்யத் திரும்பியாக வேண்டும். இது என் உத்தரவு!” என்றான் மானேஜர்.

அவன் யாரையும் பார்க்காமல், இரும்புக் குவியலின்மீது பதமாகக் கால்வைத்துக் கீழிறங்கத் தொடங்கினான்.

கூட்டத்தினரிடையே அதிருப்திக் குரல்கள் கிளம்பின.

“என்ன இது?” என்று சட்டென்று நின்று சத்தமிட்டான் மானேஜர்.

அமைதியைக் குலைத்து தொலைவிலிருந்து ஒரே ஒரு குரல் ஒலித்தது:

“நீயே போய் வேலை செய்!”

“இன்னும் பதினைந்து நிமிஷ நேரத்தில் நீங்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால், உங்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கும்படி உத்தரவிடுவேன்” என்று அழுத்தமும் வறட்டுத் தன்மையும் நிறைந்த குரலில் சொன்னான் மானேஜர்.

மீண்டும் அவன் கூட்டத்தின் ஊடாக வழிதேடி, நடந்து சென்றான்; அவன் திரும்பிச் செல்லும்போது அவனுக்குப் பின்னால் தங்கிய கூட்டத்தினர் கசமுசத்தனர்; அவன் செல்லச் செல்ல அந்தக் கசமுசப்பும் அதிகரித்தது.

“போய், அவனோடு பேசிப் பாருங்கள்!”

“இதுதானப்பா, உனக்குக் கிடைக்கும் நியாயம்! என்ன பிழைப்பு வாழ்கிறது?” அவர்கள் பாவெலை நோக்கித் திரும்பிச் சத்தமிட்டார்கள்.

“ஏ, சட்டப்புலியே! இப்போது நாங்கள் என்ன செய்வதாம்?”

“பிரமாதமாக மட்டும் பேசிக் கிழித்து விட்டாய்! மானேஜர் - முகத்தைக் கண்டவுடன் உன் வீராப்பெல்லாம் பறந்தோடிவிட்டது!”

“பாவெல் சொல்லு! நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்!”

தாங்கமுடியாத அளவுக்கு இந்தக் கசப்புக் குரல்கள் பெருகிவரவே. பாவெல் வாய்திறந்தான்:

“தோழர்களே, கூலியைக் குறைக்கமாட்டேன் என்று அவர் உறுதி கூறினால் அல்லாது, நாம் வேலைக்குப் போகக்கூடாது. இதுதான் என் யோசனை.”

“உத்வேகமான பல குரல்கள் உடனே ஒலித்தன.”

“எங்களை என்ன, முட்டாள்கள் என்று நினைத்தாயா?”