பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

97


அதிகாரி முன்னொருமுறை வந்தது போலவே, இப்போதும் அவர்களது இருதயங்களைத் தொட்டுத் துன்புறுத்தும் குத்தலான கிண்டலும், குறும்புத்தனமான சிரிப்பும் வெடிக்க, வந்து சேர்ந்தான். தன் மகனது முகத்தின்மீது பதிந்த பார்வையை அகற்றாது. அமைதியாக ஒரு மூலையிலே. முடங்கி உட்கார்ந்துவிட்டாள் தாய். அவனோ தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றான். என்றாலும் அந்த அதிகாரி சிரிக்கும்போதெல்லாம் அவனது கை விரல்கள் அவனையும் அறியாமல் முறுக்கிப் பிசைந்துகொண்டன; அவன் எதிர்த்துப் பேசாமல் வாயை அடக்கிக்கொண்டிருப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதையும், அந்தப் போலீஸ்காரனின் கிண்டல்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பது அவனுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பதையும் தாய் உணர்ந்துகொண்டாள். முதல் தடவை பயந்ததுபோல் அவள் இப்போது அவ்வளவாக பயப்படவில்லை. இந்தக் கொடிய அர்த்த ராத்திரி விருந்தாளிகள் மீதுள்ள பகையுணர்ச்சிதான் அவள் உள்ளத்தில் வளர்ந்திருந்தது: அவளது பயவுணர்ச்சியை அந்தப் பகையுணர்ச்சி விழுங்கிவிட்டது.

“அவர்கள் என்னைக் கொண்டுபோய் விடுவார்கள்” என்று அவளிடம் லேசாக முணுமுணுக்க முயன்றான் பாவெல்.

“எனக்குத் தெரியும்” என்று மெதுவாக, தலையைக் குனிந்துகொண்டே சொன்னாள் தாய்.

அன்று காலையில் அவன் தொழிலாளர்களிடம் பேசிய பேச்சுக்காக அவனை அவர்கள் சிறையில் போடத்தான் செய்வார்கள் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். ஆனால், எல்லாரும் அவன் கூறியதை ஒப்புக்கொண்டார்கள்; எனவே எல்லாரும் அவனது விடுதலைக்காக விழித்தெழுந்து போராட வேண்டும்; அப்படிச் செய்தால் அவனை அவர்கள் அதிகநாள் சிறையில் வைத்திருக்க முடியாது....

தன் கைகளால் அவனை அணைத்து வாய்விட்டு அழவேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் அந்த அதிகாரியோ அவளுக்கு அருகில் வந்துநின்று ஓரக்கண்ணால் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மீசை துடித்தது. உதடுகள் நடுங்கின. அவன் நிற்கிற நிலையைப் பார்த்தால், கண்ணீரும் கம்பலையுமாகத்தான் கதறப்போவதை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. அவள் தனது முழுப்பலத்தையும் சேகரித்துக்கொண்டு தன் மகனின் கரத்தைப் பற்றிப் பிடித்தாள்; மெதுவாகவும் அமைதியாகவும் திணறுகின்ற மூச்சோடும் பேசினாள்.