பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மக்சீம் கார்க்கி


“போய்வா, பாஷா. உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டாயா?”

“ஆமாம்: நீ தனியாயிருந்து கவலைப்படாதே!”

“கடவுள் உனக்கு அருள் செய்யட்டும்.....”

அவர்கள் அவனை அழைத்துச் சென்ற பின்னர், அவள் அப்படியே பெஞ்சின் மீது சரிந்து சாய்ந்து உட்கார்ந்தாள்; அமைதியாகக் கண்ணீர் பெருக்கினாள். அவளது கணவன் வழக்கமாகச் சாய்ந்திருக்கும் நிலையிலேயே, அவளும் அந்தச் சுவரோடு சாய்ந்து. சோகம் நிறைந்த உள்ளத்தோடு, நிராதரவான தன் நிலையைப் பற்றிய பிரக்ஞை உணர்ச்சியின் வேதனையோடு அப்படியே இருந்தாள். தலையைப் பின்னால் பட்டென்று மோதிச் சாய்த்தவாறே அவள் அமுங்கிய, ஓய்வற்ற குரலில் அழுதாள். அந்த அழுகுரலில் அவளது புண்பட்ட இதயத்தின் வேதனை முழுவதும் பொங்கி வழிந்தது. ஆனால் அவளது மனக்கண் முன்னே அந்த அசைவற்ற மஞ்சள் மூச்சு அதிகாரியின் மெல்லிய மீசையும், களிதுள்ளும் குறுகிய பார்வைகொண்ட கண்களுமே நிழலாடிக்கொண்டிருந்தன. நியாயத்துக்காகப் போராடும் ஒரே காரணத்துக்காகத் தாய்மார்களிடமிருந்து பிள்ளைகளைப் பறித்துச் செல்லும் அந்த மனிதர்களின் மீது ஏற்படும் கசப்புணர்ச்சியும் பகையுணர்ச்சியும் கார்மேகம்போல் கவிந்து படர்ந்தது.

நல்ல குளிர்; வெளியிலே பெய்யும் மழை ஜன்னல்களின் மீது படபடத்து விழுந்தது. நெடிய கைகளும் கண்களே இல்லாத சிவந்த முகங்களும் கொண்ட சாம்பல் நிற உருவங்கள் அந்த அர்த்த ஜாமத்தில் தன் வீட்டைச் சுற்றிச்சுற்றிப் பாராக்கொடுப்பது போலவும், அவர்களது பூட்ஸ் வாடங்கள் மங்கி ஒலித்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது.

“அவர்கள் என்னையும் கொண்டு போயிருந்தால்?” என்று நினைத்தாள் அவள்.

ஆலைச் சங்கு அலறி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்தது: அந்த அதிகாலை வேளையில் அந்தச் சங்கு தாழ்ந்தும் கரகரத்தும் நிதானமற்று ஒலித்தது. கதவைத் திறந்து கொண்டு ரீபின் உள்ளே வந்தான். தாடியிலிருந்து வழிந்தொழுகும் மழை நீரைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவன் முன் வந்து நின்று கேட்டான்:

“அவர்கள் அவனைக் கொண்டுபோய் விட்டார்களா?”

“ஆமாம். அவர்கள் நாசமாய்ப் போக” என்று பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள்.