பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

105


“செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் நானே செய்கிறேன் என்பதையும் அவனிடம் சொல்லுங்கள்; அவனுக்கும் அது தெரிந்திருக்கட்டும்” என்றாள் தாய்.

“அவர்கள் சமோய்லவைச் சிறைக்கு அனுப்பாவிட்டால்?” என்று கேட்டான் இகோர்.

“அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றாள் தாய்.

அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட தாய் தன் பேச்சின் தவறை உணர்ந்து அதை மழுப்புவதற்காகத் தானும் சிரித்துக்கொண்டாள்.

“உங்கள் தொல்லைகளையே நீங்கள் கவனிப்பதால், ஊரார் தொல்லைகளை உங்களால் கவனிக்க முடியவில்லை” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள் அவள்.

“அது இயற்கைதானே” என்று ஆரம்பித்தான் இகோர்: “நீங்கள் மாத்திரம் பாவெலையே எண்ணி எண்ணி வருத்தப்பட்டு மறுகவில்லையா? அவன் சிறையிலிருந்து வரும்போது கொஞ்சம் தேறிக்கூட வருவான். அங்கே நல்ல ஓய்வு கிடைக்கிறது; படிப்பதற்கு அவகாசமும் உண்டு. ஆனால் நம்மை மாதிரி ஆட்கள் வெளியில் இருந்தால் இந்த இரண்டு காரியத்துக்கும் நமக்கு இங்கு நேரமே கிடைப்பதில்லை. நான் மூன்று முறை சிறைக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையிலும் என் இதயமும் சிந்தையும் எவ்வளவோ பயனடைந்திருக்கின்றன. அந்த அனுபவம் இன்ப அனுபவமாக இல்லாவிட்டாலும், பலன் என்னவோ நல்ல பலன்தான்!”

“நீங்கள் மூச்சு விடுவதற்கே திணறுகிறீர்களே!” என்று அவனது எளிய முகத்தை அன்பு ததும்பப் பார்த்தவாறே கேட்டாள் தாய்.

“அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது” என்று ஒரு விரலை உயர்த்திக் காட்டிக்கொண்டே சொன்னான் அவன், “சரி, எல்லாம் ஒரு வழியாய் முடிந்தது என்றே நினைக்கிறேன் இல்லையா. அம்மா? நாளைக்கு உங்களிடம் அந்தச் சரக்குகள் வந்து சேரும். அப்புறம், யுகாந்திர இருளை அறுத்தெறியும் ரம்பம் மீண்டும் சுழலத் துவங்கும். பேச்சுச் சுதந்திரம் நீடூழி வாழ்க! தாயின் இதயம் நீடூழி வாழ்க! நான் வருகிறேன், நாம் மீண்டும் சந்திப்போம்!”.

“வருகிறேன்” என்று அவளது கையைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே சொன்னான் சமோய்லவ். “என் தாயிடம் இந்த மாதிரி விஷயங்களை என்னால் சொல்லக்கூட முடியாது.”