பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

107


வாயைக்கட்டி வயிற்றைக்கட்டுச் சேர்த்து வைத்திருந்தால், எவனாவது ஒரு துடைகாலி வந்து, அதையும் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டு போய்விடுகிறான். பெண்ணாகப் பிறந்தாலே இந்தப் பிழைப்புத்தான். ஊம், என்ன கழிசடைப் பிழைப்பு! தனியாய் வாழ்வது சங்கடமாயிருக்கிறது; எவன் கூடவாவது வாழ்வது அதைவிடத் தொல்லையாயிருக்கிறது!”

“நான் உன்னிடம் ஒரு காரியமாக வந்தேன். நீ என்னை ஒரு கையாளாக அமர்த்திக்கொள்கிறாயா?” என்று மரியாவின் வாயளப்பிற்கிடையே குறுக்கிட்டுப் பேசினாள் தாய்.

“அது எப்படி?” என்றாள் மரியா: பெலகேயா விளக்கிச் சொன்னாள். மரியா தலையை அசைத்தாள்.

“நிச்சயமாய்!” என்றாள் அவள், “என் புருஷன் கண்ணிலே படாமல் நீ. என்னை எப்படி மறைத்து வைத்திருந்தாய் என்பது நினைவிருக்கிறதா? சரி, இப்போது பசிக்குத் தெரியாமல் உன்னை நான் மறைத்து வைக்கிறேன். உன் மகன் எல்லாருடைய நன்மைக்காகவும் பாடுபட்டான். எனவே எல்லாரும் உனக்கு உதவத்தான் வேண்டும். அவன் ஓர் அருமையான பையன். எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள், அவனுக்காக இரங்குகிறார்கள். இந்த மாதிரிக் கைது செய்துகொண்டே போவதால், முதலாளிகளுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை. அதுமட்டும் நிச்சயம். தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை நீயே கவனித்துப்பார். எல்லாரும் உம்மென்று முறைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முதலாளிகள் இருக்கிறார்களே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், தெரியுமா? ஒரு மனிதனின் காலில் ஓங்கியடித்து விட்டால், அவன் ஓடாமல் நின்றுவிடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்துப்பேரை அடித்தால், நூறுபேர் முறைத்துக்கொள்கிறார்கள்!”

இவர்களது உரையாடலின் பயனாக மறுநாள் முதற்கொண்டு தாய் தொழிற்சாலையில் மத்தியான வேளையில் இருந்தாள். மரியா தந்த இரண்டு கூடைச் சாப்பாட்டோடும் நின்றுகொண்டிருந்தாள், மரியாவோ சந்தைக்கு வியாபாரம் செய்யப் போய்விட்டாள்.

15

அந்தப் புதிய சாப்பாட்டுக் கூடைக்காரியைத் தொழிலாளர்கள் லகுவில் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

“வியாபாரத்தில் இறங்கிவிட்டாயா, பெலகேயா?” என்று அவள் வந்ததை ஆமோதித்துத் தலையை ஆட்டிக்கொண்டே கேட்டார்கள்.