பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மக்சீம் கார்க்கி


சிலர் அவளது மகன் பாவெல் சீக்கிரத்திலேயே விடுதலையாகிவிடுவான் என்று ஆர்வத்தோடு உறுதி கூறினார்கள். சிலர் அவளுக்கு அனுதாபவுரைகள் புகன்றார்கள். சிலர் போலீஸ்காரர்களையும், மானேஜரையும் வாய்க்கு வந்தபடி முரட்டுத்தனமாய்த் திட்டினார்கள், இவையெல்லாம் தாயின் இதயத்திலேயும் எதிரொலித்தன. சிலர் மட்டும் அவனைப் பழிவாங்கும் வர்ம சிந்தனையோடு பார்த்தார்கள். அவர்களில் ஒருவனான இஸாய் கர்போவ் என்னும் ஆஜர் சிட்டைக் குமாஸ்தா பற்களைக் கடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

“நான் மட்டும் கவர்னராயிருந்தால், உன் மகனைத் தூக்கில் போட்டிருப்பேன். மக்களைக் கண்டபடி நடத்திச் செல்வதற்கு அதுதான் சரியான தண்டனை!”

இந்த வர்மப் பேச்சு அவளது எலும்புக் குருத்தைச் சில்லிட்டு நடுக்கியது. அவள் இஸாய்க்குப் பதிலே சொல்லவில்லை. அவனது சின்னஞ் சிறிய மச்சம் விழுந்த முகத்தை மட்டும் ஒரு பார்வை பார்த்தாள்; பெரு மூச்செறிந்தவாறு, கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

தொழிற்சாலையில் அமைதியே நிலவவில்லை, தொழிலாளர்கள் சிறுசிறு கூட்டமாகக் கூடி நின்று, ஏதோ இரகசியம் பேசிக்கொண்டார்கள். மனங்கலங்கிப்போன கங்காணிகள் வேவு பார்த்துத் திரிந்தார்கள். ஆங்காரமான வஞ்சின வசவுகளும், குரோதம் பொங்கும் சிரிப்பொலியும் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தன.

இரண்டு போலீஸ்காரர்கள் சமோய்லவை நடத்திக் கூட்டிக்கொண்டு அவள் பக்கமாகச் சென்றார்கள். அவன் தனது ஒரு கையைச் சட்டைப் பைக்குள் புகுத்தியவாறும், மறு கையால் தனது செம்பட்டை மயிரை ஒதுக்கித் தள்ளியவாறும் நடந்து சென்றான்.

சுமார் நூறு தொழிலாளர்கள் அந்தப் போலீஸ்காரர்களுக்குப் பின்னாலேயே சென்று, ஆங்காரத்தோடு சத்தம் போட்டார்கள்; போலீஸ்காரர்களைக் கிண்டல் செய்தார்கள்.

“என்ன சமோய்லவ், உலாவப் போகிறாயா?” என்று யாரோ கேட்டார்கள்.

“இப்போதெல்லாம் அவர்கள் நம்மவர்களை மதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் தான் நாம் உலாவப் போகும் போதுகூட, முன்பாரா பின்பாராப் போட்டுத் துணைக்கு ஆளனுப்பி வைக்கிறார்கள்” என்றான் வேறொருவன்.

இதைத் தொடர்ந்து திட்டித் தீர்த்தான்.