பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

109


“இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிப்பதில்லாபமில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள் யோக்கிய மானவர்களையே பிடித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்” என்று நெட்டையான ஒற்றைக்கண் தொழிலாளி ஒருவன் சொன்னான்.


“இதுவரையிலும் அவர்களை இராத்திரியில்தான் பிடித்துக் கொண்டு போவது என்ற மரியாதையாவது இருந்தது. இப்போதோ பட்டப் பகலிலேயே பிடித்துக்கொண்டு போகிறார்கள், அயோக்கியப் பயல்கள்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கத்தியது.

அந்தப் போலீஸ்காரர்கள் முகத்தைச் சுழித்துக்கொண்டே எட்டி நடக்க முனைந்தார்கள். தங்கள் மீது ஏவும் வசைமொழிகளைக் காதில் வாங்காத பாவனையில், எதையுமே கவனிக்காதவர்கள் போல் விரைவாக நடந்தார்கள். போகிற வழியில் ஓர் இரும்புக் கடப்பாரையைச் சுமந்து வந்த மூன்று தொழிலாளர்கள் அவர்களை வழிமறித்துக்கொண்டு சத்தமிட்டார்கள்.

“அப்படிப் போங்கடா, அட்டுப் பிடித்தவன்களே!”

சமோய்லவ் தாயைக் கடந்து செல்லும்போது தலையை ஆட்டினான்.

“நாங்கள் போகிறோம்!” என்று கசந்த சிரிப்புடன் கூறினான்.

அவள் வாய் பேசாது அவனை வணங்கி வழியனுப்பினாள். உதட்டிலே புன்னகை பூத்தபடி சிறைக்குச் செல்லும் நாணயமும் ஞானமும் நிறைந்த அந்த இளைஞர்களைக் கண்டு அவளது உள்ளம் நெகிழ்ந்தது. அவனது இதயம் தாய்மையின் பரிவோடும் பாசத்தோடும் விம்மியெழுந்தது.

அன்று அவள் தொழிற்சாலையிலிருந்து திரும்பி வந்த பிறகு குறைப்பொழுதையும் மரியாவுடன் போக்கினாள். அவளது வம்பளப்பைக் கேட்டுக்கொண்டே, அவளது வேலைகளில் தானும் பங்கெடுத்து உதவினான். மாலையில் வெகுநேரம் கழித்து, அவள் தனது குளிர் நிறைந்து, வெறிச்சோடி வசதிகெட்டுப் போன வீட்டுக்குத் திரும்பி வந்தாள். வெகு நேரம் வரையிலும் அவள் மன அமைதியே காணாமல், என்ன செய்வது என்பதும் தெரியாமல், அங்குமிங்கும் நடந்து அலைக்கழிந்தான். இருள் அநேகமாகக் கவிந்து படர்ந்துவிட்டதைக் கண்டு அவள் உள்ளங் கலங்கினாள். ஏனெனில் இகோர் இவானவிச் தான் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப்போன அந்த பிரசுரங்களை இன்னும் கொண்டு வந்து கொடுக்கக் காணோம்.