பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மக்சீம் கார்க்கி


ஜன்னலுக்கு வெளியே இலையுதிர் காலத்தின் கனத்த சாம்பல் நிற பனித்துண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அந்தப் பனித்துண்டுகள் ஜன்னல் கண்ணாடிகளில் விழுந்து, உருகி வழிந்து சத்தமின்றி நழுவி வழிந்தன; அவை விழுந்த இடங்களில் ஈரம் படிந்த வரிக்கோடுகள் தெரிந்தன. அவள் தன் மகனைப்பற்றிச் சிந்தித்தாள்.....


கதவை யாரோ எச்சரிக்கையாய்த் தட்டும் ஓசை கேட்டது. தாய் விறுட்டென்று ஓடிப்போய் நாதாங்கியைத் தள்ளினாள். சாஷா உள்ளே வந்தாள். தாய் அவளை ரொம்ப நாட்களாய் பார்க்கவே இல்லை. எனவே அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவள் அளவுக்கு மீறிப் பருத்திருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.


“வணக்கம்” என்றாள் தாய், யாராவது ஒருவரேனும் வந்து சேர்ந்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இனிமேல் அன்றிரவின் கொஞ்சநேரமாவது தான் தனிமையில் கிடந்து அவதிப்பட வேண்டியிருக்காது என்ற திருப்தி. “உங்களைப் பார்த்து ரொம்ப நாளாகிறது. இல்லையா? எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா?” என்று கேட்டாள் தாய்.


“இல்லை. நான் சிறையில் இருந்தேன்” என்று புன்னகையுடன் பதில் சொன்னாள் அந்த யுவதி, “நிகலாய் இவானவிச்சுடன் நானும் இருந்தேன்-அவனை ஞாபகமிருக்கிறதா?”

இல்லாமலென்ன, நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றாள் தாய்; “நேற்றுத்தான் இகோர் இவானவிச் சொன்னான்; அவனை விடுதலை செய்த செய்தியை மட்டும்தான் சொன்னான். ஆனால். எனக்கு உங்களைப்பற்றித் தெரியாது.... நீங்களும் சிறையிலிருந்தீர்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை.”


“பரவாயில்லை. சரி, இகோர் இவானவிச் வருவதற்கு முன்னால் நான் உடைமாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அங்கு மிங்கும் பார்த்தாள்.

“உங்கள் கோட்டு முழுவதும் நனைந்து போயிருக்கிறதே.”

“ஆமாம். நான் அறிக்கைகளும் பிரசுரங்களும் கொண்டு வந்திருக்கிறேன்.”


“எடுங்கள் அதை எடுங்கள்!” என்று ஆர்வத்தோடு கத்தினாள் தாய்.


அந்தப் பெண் தனது கோட்டைக் கழற்றி, உடம்பைக் குலுக்கினாள். உடனே மரத்திலிருந்து இலைகள் உதிர்வதுபோல, காகிதங்கள் பறந்து விழுந்தன. தாய் சிரித்துக்கொண்டே அந்தக் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கினாள்.