பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மக்சீம் கார்க்கி


சாஷாவும் சமையலறைக்குள் சென்று, அங்குக் கிடந்த பெஞ்சின் மீது, கைகளைத் தலைக்குப்பின்னால் அணை கொடுத்துக்கொண்டு, உட்கார்ந்தாள்.

“என்ன இருந்தாலும் சிறை வாழ்க்கை ஆளை இளைத்துப் போகத்தான் செய்கிறது. சங்கடமான சோம்பேறித்தனம் இருக்கிறதே, அதைவிட மோசமானது ஒன்றுமே இல்லை. எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது தெரிந்திருந்தும், அடைபட்ட மிருகத்தைப்போல், அங்கே சும்மா அடங்கியிருப்பது என்பது....”

“உங்கள் உழைப்புக்கெல்லாம் யார் கைம்மாறு செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டாள் தாய்.


பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத்தானே அதற்கு விடையும் கூறிக்கொண்டாள்.


“கடவுள்தான் கைம்மாறு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையும் கிடையாது; இல்லையா?” “இல்லை” என்று சுருக்கமாகத் தலையையாட்டிலிட்டுப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.

“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை” என்று உணர்ச்சி பூர்வமாகச் சொன்னாள் தாய். பிறகு தன் ஆடை மீது படிந்திருந்த கரித்தூசியைக் கையால் தட்டிவிட்டுக்கொண்டு. நிச்சயமான குரலில் பேசினாள்:

“உங்கள் கொள்கையே உங்களுக்குப் புரியவில்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இந்தவிதமான வாழ்க்கை எப்படித்தான் நடத்த முடியும்?


திடீரென வெளியில் வாசல் பக்கத்தில் காலடியோசையும் கசமுசப்புக் குரல்களும் கேட்டன. தாய் கதவைத் திறக்கப் புறப்பட்டாள். அதற்குள் அந்தப் பெண் துள்ளியெழுந்து நின்றாள்.

“கதவைத் திறக்காதீர்கள்” என்று இரகசியமாகக் கூறினாள் சாஷா அவர்கள் போலீஸ்காரர்களாயிருந்தால், என்னை யாரென்று தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். ஏதாவது கேட்டால், நான் இருட்டில் வீடு தெரியாமல் வழி தவறி இங்கு வந்ததாகவும், வாசல் நடையில் மயக்கமுற்று விழுந்திருந்ததாகவும் சொல்லுங்கள். பிறகு என் ஆடையணிகளை அவிழ்த்து என்னை ஆசுவாசப்படுத்தியபோது இந்தக் காகிதங்களைக் கண்டதாகச் சொல்லுங்கள். தெரிந்ததா?”

“அடி. என் கண்ணே! நான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?” என்று கனிவாய்க் கேட்டாள் தாய்.