பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

113


“ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்று கூறிக்கொண்டே கதவருகே காதைக் கொண்டுபோனாள். “இகோர் மாதிரி இருக்கிறது.”

வந்தது இகோர்தான். அவன் ஒரே தெப்பமாக நனைந்து இளைத்துக் களைத்துத் திணறிக்கொண்டிருந்தான்.

“அடேடே! தேநீர் தயாராகிறதா? ரொம்ப சரி! அம்மா, தேநீரைப்போல எனக்கு இப்போது தெம்பு அளிக்கக்கூடியது எதுவுமில்லை: அட, சாஷாவா? நீங்கள் ஏற்கெனவே வந்துவிட்டீர்களா?”

அடுப்பங்கரை முழுதும் ஒலிக்கும் குரலில் கொரட்டு கொரட்டென்று மூச்சுவிட்டபடி, இடைவிடாது பேசிக்கொண்டே, தன்னுடைய கனத்த கோட்டை மெதுவாகக் கழற்றினான்.

“அம்மா, இதோ இருக்கிறாளே, இந்தப் பெண்ணைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பிடிப்பதே இல்லை. சிறைக் காவலாளி இவளைக் கண்டபடி பேசத் துணிந்தான் என்பதற்காக அவன் மன்னிப்புக் கேட்கிறவரையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டாள் இவள். எட்டு நாட்களாய் இவள் எதுவுமே சாப்பிடவில்லை. உயிர்தான் போகவில்லை. கெட்டிக்காரிதானே? என் வயிற்றையும் தான் பாரேன்.”

அவன் தனது தொப்பை விழுந்து பெருத்த தொந்தி வயிற்றை நிமிர்த்தி நடந்தவாறே அடுத்த அறைக்குள் போனான். அறைக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போகும்போதும் அவன் பேசிக்கொண்டே தானிருந்தான்.

“நீங்கள் என்ன எட்டு நாட்களாகவா சாப்பிடவில்லை? உண்மையாகவா?” என்று அதிசயத்தோடு கேட்டாள் தாய்.


“அவனை மன்னிப்புக் கோர வைப்பதற்கு நானும் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அவள். அந்தப் பெண்ணின் உறுதியும் உக்கிரமும் நிறைந்த பேச்சில் ஏதோ ஒரு கண்டன பாவமும் தொனிப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“இவள் குணம் இப்படி” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

“நீங்கள் செத்துப்போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்டாள் பெலகேயா.

“செத்தால் சாகவேண்டியதுதான்” என்று மெதுவாகச் சொன்னாள் அவள். “ஆனால், அவன் மன்னிப்புக் கேட்டுவிட்டான். நம்மைப் பற்றி ஒருவன் கேவலமாகப் பேசும்படி நாம் விட்டுவிடக் கூடாது.”