பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

மக்சீம் கார்க்கி


“ஊம்!” என்று மெதுவாக முனகினாள் தாய். “ஆண்கள் எல்லாருமே அப்படித்தான் - பெண்களாகிய நம் வாழ் நாள் முழுதும் அவர்களிடம் கேவலப்பட வேண்டியதுதான்.”

“சரி. நான் என் மூட்டையை இறக்கித் தள்ளியாய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான் இகோர். “தேநீர் தயாரா? சரி, இருங்கள். நான் அதை இறக்கி எடுக்கிறேன்.”

அவன் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போனான்; கொண்டு போகும்போதே அவன் சொன்னான்.

“என்னைப் பெற்ற அருமை அப்பன் இருக்கிறாரே, அவர் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இருபது குவளை தேநீராவது குடிப்பார். அதனால்தான் அவர் ஆரோக்கிய திடகாத்திரத்தோடு அமைதியுடன் வாழ்ந்தார். 120 கிலோ எடையுள்ள உடம்போடு வஸ்க்ரெசேன்ஸ்க் ஊர்த் தேவாலயத்துப் பாதிரியாக வேலை பார்த்து, எழுபத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தார்.”

“நீங்கள் இவான் சாமியாரின் மகனா?” என்று கேட்டாள் தாய்.

“ஆமாம். ஆமாம். என் தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நானும் வஸ்க்ரெசேன்ஸ்க் ஊர்க்காரிதான்.”

“அடேடே! நீங்கள் என் ஊர்க்காரரா? சரி, நீங்கள் யார் மகள்?”

“உங்கள் அடுத்த வீட்டுக்காரரான செரியோகின் தம்பதிகள்தான் என் பெற்றோர்.”

நொண்டி நடக்கும் நீல்லின் மகளா நீங்கள்? எனக்கு அவரை நன்றாய்த் தெரியுமே! எத்தனை தடவை அவர் என் காதைப்பிடித்துத் திருகியிருக்கிறார், தெரியுமா?”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டே சரமாரியாகக் கேள்வி கேட்டுக்கொண்டார்கள். தேநீரை வடிகட்டிக்கொண்டிருந்த சாஷா புன்னகை செய்தான். கோப்பைகளின் ஓசை தாயை மீண்டும் சூழ்நிலையின் பிரக்ஞைக்கு. இழுத்து வந்தது.

“ஓ! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாம் எனக்கு மறந்தே போய்விட்டது. சொந்த ஊர்க்காரர் யாரையாவது சந்திப்பது என்றால், ஒரே மகிழ்ச்சி.”

“இல்லை. மன்னிப்புக் கேட்க வேண்டியது நான்தான். நான் பாட்டுக்கு இங்கேயே பொழுதைப் போக்கிவிட்டேன். மணி