பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

117


இருந்தால், அவள் சிறையில் இருக்கிறாள், அவள் வெளியில் இருந்தால் அவன் சிறையிலிருக்கிறான்.”

“எனக்குத் தெரியாதே” என்று ஒரு கணம் கழித்துப் பதில் சொன்னாள் தாய். “பாவெல் தன்னைப்பற்றிப் பேசுவதே இல்லை.”

தாய்க்கு அந்தப் பெண்மீது அதிகப்படியான அனுதாப உணர்ச்சி மேலோங்கியது. தன்னை மீறிய ஒரு வெறுப்புணர்ச்சியோடு அவள் இகோரிடம் திரும்பிப் பேசினாள்.

“நீங்கள் ஏன் அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடவில்லை?”

“அது முடியாது” என்று அமைதியுடன் பதில் சொன்னான் இகோர். “எனக்கு இங்கே எத்தனையோ வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது. விடிந்து எழுந்திருந்தால் ஒவ்வொரு இடமாகப் போய்வர வேண்டும். என்னை மாதிரி மூச்சு முட்டும் பேர்வழிக்கு அதுவே ரொம்பச் சிரமமான காரியம்.”

“அவள் நல்ல பெண்” என்றாள் தாய். அவளது மனத்தில் இகோர் அப்போது சொன்ன விஷயமே நிறைந்து நின்றது. அந்த விஷயத்தைத் தன் மகன் மூலமாகக் கேள்விப்படாமல், ஓர் அன்னியன் மூலமாகக் கேள்விப்பட்டதானது அவளது மனத்தைப் புண்படுத்திவிட்டது. அவள் தன் புருவங்களைச் சுருக்கிச் சுழித்து, இரு உதடுகளையும் இறுகக் கடித்து மூடிக்கொண்டாள்.

“அவள் நல்ல பெண்தான். சந்தேகமே இல்லை” என்று தலையை ஆட்டினான் இகோர். “நீங்கள் அவளுக்காக வருத்தப்படுவது எனக்குத் தெரிகிறது. அதில் அர்த்தமே கிடையாது. எங்களை மாதிரிப் புரட்சிக்காரர்களுக்கெல்லாம் அனுதாபப்பட்டுக்கொண்டிருந்தால், இதயமே தாங்காது. உண்மையைச் சொல்லப்போனால், எங்களில் யாருக்குமே சுக வாழ்க்கை கிடையாது. என்னுடைய தோழர்களில் ஒருவன் நாடு கடத்தப்பட்டு, சமீபத்தில்தான் திரும்பி வந்தான். அவன் நீழ்னி நோவ்கரத் சென்ற பொழுது, அவனது மனைவியும் குழந்தையும் ஸ்மலென்ஸ்கில் அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் ஸ்மலேன்ஸ்கிக்குத் திரும்பி வருவதற்குள், அவர்கள் மாஸ்கோ சிறைக்குள் சென்று விட்டார்கள். இப்போதோ அவனது மனைவி சைபீரியாவுக்குப் போகப்போகிறாள். எனக்கும் ஒரு மனைவி இருந்தாள். ரொம்பவும் அருமையானவள்தான். இந்த மாதிரிதான் நாங்களும் ஐந்து வருஷம் தத்தளித்தோம். பிறகு அவளது வாழ்வும் முடிந்தது.”