பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

127


நினைத்துப் பார்ப்பதே இல்லை. யார் யாரோ மீது உள்ள கோபத்தையும் காட்டத்தையும் என்மீது காட்டித் தாக்குவான். இருபது வருஷ காலம் நான் இப்படியேதான் உயிர் வாழ்ந்தேன். என் கல்யாணத்துக்கு முன்னால் நான் எப்படியிருந்தேன் என்பதுகூட எனக்கு நினைவில்லை. என் கடந்த காலத்தைப்பற்றி நினைத்தாலே நான் குருடாகிப் போவது மாதிரி இருக்கிறது. எதுவுமே தெரிவதில்லை. இகோர் இவானவிச் இங்கே வந்திருந்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள் அவன் எதை எதைப்பற்றியெல்லாமோ பேசினான். எனக்கோ அங்குள்ள வீடுகள் ஞாபகத்துக்கு வந்தன; ஜனங்கள் நினைவுக்கு வந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன ஆனார்கள்—இதெல்லாம் நினைவுக்கு வரவேயில்லை. எப்போதோ தீப்பிடித்து எளிந்த சம்பவம்—இல்லை இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. எனக்கு என்னவோ என் இதயத்தையே பூட்டிவிட்டது போல், என் ஆத்மாவுக்கே முத்திரையிட்டு இறுக மூடிவிட்டது போல் இருக்கிறது. கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை...”

கரையில் இழுத்துப் போட்ட மீனைப் போல், அவள் மூச்சுக்காக வாயைத் திறந்து திணறினாள். முன்புறமாகக் குனிந்துகொண்டு மீண்டும் அவள் தணிந்த குரலில் பேசத் தொடங்கினாள்.

“என் கணவன் இறந்தான். நானும் என் மகனைக் கவனிக்கத் தொடங்கினேன். ஆனால் அவனோ இந்த மார்க்கத்தில் ஈடுபட்டு விட்டான். எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. அவனுக்காக அனுதாபப்பட்டேன். அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நான் எப்படி வாழ்வது என்ற கவலை எனக்கு. நான் எப்படிப் பயந்து நடுங்கினேன் தெரியுமா? அவனுக்கு என்ன நேரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்தபோது என் இதயமே வெடித்துவிட்ட மாதிரி இருந்தது....”

அவள் ஒரு கணம் மௌனமாயிருந்தாள். பிறகு மீண்டும் தலையை ஆட்டிவிட்டுப் பேசத் தொடங்கினாள்.

“பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல. நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது. இதோ நீங்கள் இருக்கிறீர்கள். தாயை எண்ணித் துக்கப்படுகிறீர்கள். எதற்காக நீங்கள் அவளை விரும்புகிறீர்கள்? இதோ இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்; சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள்; இளம்பெண்கள்