பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

மக்சீம் கார்க்கி


தன்னந்தனியாக வெகுதூரம் நடந்து செல்கிறார்கள். இருட்டிலே, மழையும் பனியும் கொட்டுகின்ற குளிரிலே, சேறு நிறைந்த பாதை வழியே ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கும் நடந்து செல்கிறார்கள்; அவர்களை இப்படிச் செய்யச் சொல்வது யார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், அவர்கள் கொண்டுள்ள அன்பு, பரிசுத்தமான தூய்மையான அன்பு அவர்களிடம் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அந்திரியூஷா! ஆனால் எனக்கோ, அந்த மாதிரி நேசிக்க முடியவில்லை! எனக்குச் சொந்தமானவர்களையே மிகவும் நெருங்கியவர்களையே நான் நேசிக்கிறேன்!”

“நீங்களும் நேசிக்க முடியும்” என்று ஒரு புறமாகத் திரும்பிக்கொண்டு சொன்னான் ஹஹோல். அப்படிச் சொல்லும்போது வழக்கம்போலவே தன் கைகளால் தலையையும் கன்னத்தையும் கண்களையும் பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான்.” எல்லோரும் தம்மோடு நெருங்கியிருப்பதையே மிகவும் நேசிக்கிறார்கள்; ஆனால் ஒரு பரந்த இதயம், தனக்கு வெகுதொலைவில் உள்ள பொருள்களைக்கூட, தன்னருகே கவர்ந்திழுத்து நெருங்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும் —ஏனெனில் உங்களிடம் மகத்தான தாய்மை அன்பு ததும்பி நிற்கிறது!”

“அப்படியே ஆகட்டும்” என்று பெருமூச்சோடு சொன்னாள் அவள். “இந்த மாதிரி வாழ்வதும் ஒரு நல்ல வாழ்வுதான் என்பதை நான் உணர்கிறேன், அந்திரேய்! நான் உங்களை நேசிக்கிறேன்; ஒரு வேளை பாவெலைவிட. உங்களை நான் அதிகம் நேசிக்கவும் செய்யலாம். அவனோ என்னிடம் திறந்துகூடப் பேசுவதில்லை, நீங்களே பாருங்கள். அவன் சாஷாவைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். ஆனால் என்னிடம் அவன் தாயிடம், இதுவரை ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.....”

“அது உண்மையல்ல” என்று ஆட்சேபித்தான் ஹஹோல். “அது உண்மையல்ல என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவன் அவளைக் காதலிக்கிறான்; அவளும் அவனைக் காதலிக்கிறாள். அதுவும் உண்மைதான். ஆனால் அவர்கள் என்றுமே கல்யாணம் செய்து கொள்ளப்போவதில்லை. அவள் விரும்பலாம். ஆனால் பாவெல் விரும்பமாட்டான்.”

“அப்படியா செய்தி!” என்று; சிந்தனை வசப்பட்டவளாய்ச் சொன்னாள் தாய். அவளது துயரம் தோய்ந்த கண்கள் ஹஹோலின் முகத்தையேப் பார்த்தன; “இப்படியா இருப்பது? நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்....”