பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

மக்சீம் கார்க்கி


மூன்றாவது கூலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இரகசியமாகச் சொன்னான்:

“வாருங்கள், பாய்லர் அறைக்குள்ளே போவோம்.”

கூஸெவ் தாயைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் காட்டினான்.

‘பார்த்தாயா? எப்படி வேலை?’ என்றான்.

பெலரகேயா உவகையும் உற்சாகமும் நிரம்பித் ததும்பியவாறு வீடு திரும்பினாள்.

“வாசித்துப் பார்க்கத் தெரியாததால் ஜனங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் தெரியுமா?” என்று அவள் அந்திரேயைப் பார்த்துச் சொன்னாள். “சின்னப் பிள்ளையாயிருக்கும்போது நானும்கூட எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். இப்போது எல்லாமே மறந்து போய்விட்டது.”

“ஏன், இப்போது படியேன்” என்றான் ஹஹோல்.

“இந்த வயதிலா? என்னை என்ன கேலி செய்யப் பார்க்கிறாயா?”

ஆனால் அந்திரேய் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதன் அட்டையில் உள்ள எழுத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினான்.

“இது என்ன?”

“எர்” என்ற சிரிப்போடு பதில் சொன்னாள் அவள்.

“சரி, இது?”

“அ....”

அவளுக்குத் தன் நிலைமை பரிதாபகரமாகவும் அவமானகரமாகவும் இருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அந்திரேயின் கண்கள் அவளைப் பார்த்து, கள்ளச்சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. அவள் அந்தப் பார்வைக்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால் அவனது குரல் மட்டும் அமைதியும் பரிவும் நிரம்பி இருந்தது; முகத்தில் கேலி பாவமே காணவில்லை.

“நீங்கள் உண்மையிலேயே எனக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கிறீர்களா, அந்திரியூஷா?” என்று தன் போக்கில் வந்த சிறு நகையோடு கேட்டாள் அவள்.

“ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்றான் அவன். “எப்படி எப்படியென்பதைக் கற்றுக்கொண்டால் அப்புறம் எல்லாம் மிகவும் லேசாக வந்துவிடும். படித்துத்தான் பாரேன். மந்திரத்தைச் சொல்லு; பலித்தால் வெற்றி. பலிக்காவிட்டால் பாபமில்லை!”