பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

141


அவன் தனது ஆழ்ந்த கரிய கண்களால் எதையோ வினவுவது போலவும் எதிர்பார்ப்பது போலவும் அவளைப் பார்த்தான். அவனது பலம் பொருந்திய உடம்பு முன்புறமாகக் குனிந்தது. அவனது கைகள் நாற்காலியை இறுகப் பற்றின. அவனது பழுப்பு முகம் தாடிக்குள்ளாக வெளிறியதாய்த் தெரிந்தது.

“கிறிஸ்து நாதர் விதையைப்பற்றிச் சொன்ன விஷயத்தை எண்ணிப் பார். விதையை உற்பத்தி பண்ணுவதற்காக பழைய விதை செத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது. நான் ஒரு சாமர்த்தியமான கிழட்டுக் குள்ளநரிப் பிறவி!”

அவன் நிலை கொள்ளாமல் அசைந்து கொடுத்தான்: பிறகு நிதானமாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

“நான் சாராயக்கடைக்குச் சென்று அங்குள்ளவர்களோடு சிறிது நேரம் பொழுது போக்குவேன், அந்த ஹஹோல் இன்னும் வருகிற வழியாய்க் காணோம். அவன் தன் பழைய வேலைக்குக் கிளம்பிவிட்டான் போலிருக்கிறது.”

“ஆமாம்” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள் தாய்.

“நல்லது, நீ அவனிடம் என்னைப்பற்றிச் சொல்லு.....”

அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒன்றாகவே சமையற்கட்டுக்குப் போனார்கள். ஒருவரையொருவர் முகம் கொடுத்துப் பார்க்காமலே ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

“சரி, நான் வருகிறேன்.”

“போய்வா, நீ தொழிற்சாலை வேலைக்கு எப்போது கணக்குக் கொடுக்கப் போகிறாய்?”

“ஏற்கெனவே கொடுத்தாயிற்று”. “எப்போது போகிறாய்?” “நாளைக்கு அதிகாலையில் சரி வருகிறேன்’

போகவே மனமற்றவனைப்போல் அவன் தயங்கித் தயங்கித் தடுமாறி வாசல் நடையைக் கடந்தான். ஒரு நிமிஷநேரம் அவனது ஆழ்ந்த காலடியோசையைக் காதில் வாங்கியவாறே வாசலில் நின்றாள் தாய். அதே சமயம் அவளது இதயத்தின் சந்தேகங்களும் அவள் காதில் ஒலி செய்துகொண்டிருந்தன. அவள் அமைதியாகத் திரும்பி அடுத்த அறைக்குள் வந்தாள்; ஜன்னல் திரையைத் தூக்கிக் கட்டினாள். ஜன்னலுக்கு வெளியே இருள் அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து கிடந்தது.