பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

மக்சீம் கார்க்கி


“சுற்றுமுற்றும் பார்த்தால், எல்லாமே விறைத்துப்போய், அசிங்கமாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் களைத்துச் சோர்ந்து எரிந்து விழுகிறார்கள்.....”

அவன் மேலும் துக்கம் தோய்ந்த குரலில் பேசத் தொடங்கினான்”

“மனிதனை நம்பக்கூடாது என்பதும், அவனிடம் பயப்படவேண்டும்: அவனை வெறுக்கக் கூட வேண்டும் என்பதும் கேவலமான விஷயமே. ஆனால் அது அப்படித்தான். ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நீ மனிதனை நேசிக்க மட்டுமே விரும்பலாம். ஆனால் அது எப்படி முடியும்? உன் மனத்திலே உருவாகி உயிர் பெற்றுத் துடிக்கும் புதிய இதயத்தைக் காணாமல் உன் முகத்திலேயே ஒங்கி அறைவதற்காக, உன்மீது காட்டு மிருகம் மாதிரிச் சாடியோடிவரும் மனிதனை நீ எப்படி மன்னிக்க முடியும்? அதை உன்னாலே மன்னிக்கவே முடியாது. அதற்குக் காரணம் உனது தற்காப்புச் சிந்தை அல்ல. உன்னால் எதையுமே தாங்கிக் கொள்ளக்கூட முடியலாம். ஆனால், அப்படி அறைவதை நீ ஒப்புக்கொண்டு விடுவதாக அவர்கள் நினைக்கும்படி நீ விட்டுவிடமாட்டாய். மற்றவர்களை எப்படி அடித்து நொறுக்குவது என்பதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள நீ உன் முதுகைக் குனிந்து கொடுத்து அவர்களை அடிக்க விட்டுவிடுவாயா? ஒரு நாளும் உன்னால் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது.”

அவனது கண்களில் உணர்ச்சியற்ற நெருப்பு கனல்வது போலிருந்தது; அவனது தலை பலமாகக் குனிந்து போயிருந்தது. அவன் மேலும் உறுதியோடு பேச ஆரம்பித்தான்;

“எந்தத் தவறானாலும் சரி, அது என்னைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் சரி, அதை மன்னித்து விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர்வாழவில்லை. இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கிழைப்பதை நான் விட்டுக்கொடுத்துவிடலாம்; அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால், அதைக்கண்டு நான் சிரிக்கலாம்; அது என்னைச் சீண்டுவதில்லை. ஆனால், நாளைக்கோ என்மீது பலப்பரீட்சை செய்து பழகிய காரணத்தால், வேறொருவனின் முதுகுத் தோலையும் உரிக்க அவன் முனையலாம். ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக, நெஞ்சிளக்கமற்று ஆட்களை எடைபோட வேண்டும்; பொறுக்கியெடுக்க வேண்டும். “இவன் நம் ஆள் இவன் வேறு” என்று தீர்மானிக்க வேண்டும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், இது மட்டும் ஆறுதல் தராது.”