பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

மக்சீம் கார்க்கி


தொடங்கினாள்; “உங்களுக்குச் சங்கதி தெரியுமா? இன்றைக்குக் காலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பாதிரியார் ஞானப்பாடல் பாடுகின்ற பையன் ஒருவனின் காதைத் திருகினாராம்!”

“அந்தப் பையன்களும் சுத்தப் போக்கிரிப் பயல்கள்!” என்று ஒரு வயதான கனவான் பதில் சொன்னார். அவர் உடுத்தியிருந்த உடையைப் பார்த்தால் அவர் யாரோ ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரி மாதிரி இருந்தது.

குட்டைக் கால்களும், நெட்டைக் கைகளும், துருத்தி நீண்ட மோவாயும் வழுக்கைத் தலையும் கொண்ட சித்திரக் குள்ளப் பிறவியான ஒரு மனிதன், அந்த அறைக்குள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இடையிடையே உடைந்து கரகரத்த குரலில் ஏதேதோ உத்வேகத்தோடு பேசிக்கொண்டான்;

‘விலைவாசியோ விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களோ வரவர மோசமாகிக் கொண்டே வருகிறார்கள். இரண்டாம் தரமான மாட்டுக் கறியின் விலைகூட பவுண்டுக்கு பதினான்கு கோபெக்காம்! ரொட்டி விலையோ இரண்டரைக் கோபெக்குக்கு ஏறிப்போய்விட்டது.....”

இடையிடையே கைதிகள் வந்து, போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சாம்பல் நிறமான ஆடையும் கனமான தோல் செருப்புகளும் அணிந்திருந்தார்கள், மங்கிய ஒளி நிறைந்த அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அவர்கள் திருக திருக விழித்தார்கள், அவர்களில் ஒருவனுக்கு காலில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.

சிறையின் சகல சூழ்நிலையுமே விபரிதமான அமைதியுடனும், விரும்பத்தகாத எளிமையுடனும் இருந்தது. தங்களது நிர்க்கதியான நிலைமையை அவர்கள் வெகுகாலத்துக்கு முன்பே ஏற்றுப் பழகி மரத்துப் போய்விட்டவர் போலவே தோன்றினர். சிலர் தங்கள் சிறைத்தண்டனையைப் பொறுமையோடு அனுபவித்தார்கள். சிலர் உற்சாகமே அற்று சோம்பியுறங்கிக் காத்து நின்றார்கள். இன்னும் சிலர் ஒழுங்காக வந்திருந்து உற்சாகமோ விருப்பமோ அற்று, கைதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றார்கள். தாயின் உள்ளமோ பொறுமையிழந்து துடித்துத் தவித்தது. அவள் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை எதுவுமே புரியாமல் பார்த்துக் கொண்டாள். அங்கு நிலவிய சோகமயமான எளிமையைக் கண்டு வியந்தாள்.