பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

மக்சீம் கார்க்கி


கொண்டாள். வீட்டில் இருந்தவர்கள் அந்த மனிதர்களைவிட எவ்வளவு உரித்தும் தெளிவாகவும் எளிதாகவும் பேசிக்கொள்வார்கள்:...

சதுரமாய்க் கத்தரித்துவிடப்பெற்ற சிவந்த தாடியோடு கூடிய ஒரு கொழுத்த சிறையதிகாரி வந்தான். அவளது பேரைச் சொல்லிக் கூப்பிட்டான். அவளை அவன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கெந்திக்கெந்தி நடந்துகொண்டே சொன்னான்:

“என் பின்னால் வா.’

அந்தச் சிறையதிகாரி முதுகைப் பிடித்துத் தள்ளி அவனைச் சீக்கிரம் முன்னேறி’ நடக்கச் செய்யவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

பாவெல் ஒரு சின்ன அறையில் முகத்தில் புன்னகை தவழ கைகளை நீட்டியவாறே நின்றான். அவள் அவன் கையைச் செல்லமாகப் பற்றிப் பிடித்தாள்; சிறுகச் சிரித்தாள்; படபடவென்று இமைகொட்டிப் பார்த்தாள்.

“நலமா? நன்றாயிருக்கிறாயா?’ என்றாள் அவள். அவளுக்கு பேச வார்த்தையே கிடைக்கவில்லை. தடுமாறிக் குழறினாள்.

“அம்மா, நிதானப்படுத்திக்கொள். பொறு’ என்று அவளது கையைப் பற்றி பிடித்தவாறு சொன்னான் பாவெல்,

“இல்லை. நான் நன்றாய்த்தான் இருக்கிறேன்.’

‘உன் அம்மாவா!” என்று பெருமூச்சுடன் கேட்டான் சிறை அதிகாரி: பிறகு அவன் பலமாகக் கொட்டாவி விட்டுவிட்டு, “நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் விலகி விலகி நில்லுங்கள். இடையிலே கொஞ்சம் இடம் இருக்கட்டும்” என்றான்

பாவெல் அவனது ஆரோக்கியத்தைப் பற்றியும் வீட்டு விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான். அவள் வேறுபல கேள்விகளை எதிர்பார்த்தாள். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கி அவன் கண்களையே வெறித்து நோக்கினாள். ஆனால் பயனில்லை. அவன் எப்போதும் போலவே அமைதியாக இருந்தான். கொஞ்சம் வெளுத்துப் போயிருந்தான். அவனது கண்கள் முன்னைவிடப் பெரிதாகி இருந்தன போலத் தோன்றின.

“சாஷா உன்னை விசாரித்தாள். தன்னை மறந்து விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்’ என்றாள் தாய்.

பாவெலின் கண்ணிமைகள் துடித்தன; முகம் தளர்வற்றது அவன் புன்னகை செய்தான். தனது. இதயத்தில் திடீரென ஒரு குத்தலான வேதனை ஏற்பட்டது போல தாய் உணர்ந்தாள்.