பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

151


"அவர்கள் உன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று கருதுகிறாயா?” என்று எரிச்சலோடும் துயரத்தோடும் கேட்டாள் அவள். ‘எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள். அந்தப் பிரசரங்கள் தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!” என்றாள்.

பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன.

“உண்மையாகவா?'என்று உடனே கேட்டான்.

“ஏய்! இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் இங்கே பேசக்கூடாது. உங்கள் குடும்ப விஷயம் ஒன்றை மட்டும்தான் நீங்கள் பேசலாம்” என்று தூங்கி வழியும் குரலில் சொன்னான் சிறையதிகாரி,

“இது குடும்ப விஷயமில்லையா?’ என்று எதிர்த்துக் கேட்டாள் தாய்.

“இதற்குப் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அதை இங்குப் பேசக்கூடாது. அவ்வளவுதான்” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன்.

‘சரி, நீ வீட்டு விஷயங்களையே சொல்’ என்றான் பாவெல், “நீ எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”

அவள் தனது கண்களில் இளமையில் குறுகுறுப்பு பளிச்சிட்டு மின்ன, அவனுக்குப் பதில் சொன்னாள்.

“நானா? நான்தான் அந்தச் சாமான்களையெல்லாம் தொழிற்சாலைக்கு கொண்டுபோய்க் கொடுக்கிறேன்....”

அவள் பேச்சை நிறுத்தினாள். பிறகு சிறு சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.

“முட்டைகோஸ், சூப்பு, சேமியா—இந்த மாதிரி சாமான்களையெல்லாம் மரியா செய்து தருகிறாள். மற்ற சரக்குகளும்....”

பாவெல் புரிந்து கொண்டுவிட்டான்; அவன் தன் கையால் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பொங்கிவந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டான்.

“பரவாயில்லை. நீ சும்மா இராமல் சுறுசுறுப்போடு வேலை செய்வதற்கு இது ஒரு அருமையான உத்தியோகம்தான். அப்படியென்றால் உனக்குத் தனியாயிருக்கவே நேரமிராதே” என்று அவன் அன்பு ததும்பச் சொன்னான். அந்தப் பரிவு நிறைந்த குரலை அவள் அவள் அதற்குமுன் அவனிடம் கேட்டதே இல்லை.