பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

155


“எழுதுகிறான். ஆனால் அதெல்லாம் எனக்குப் புரிவதில்லை’ என்று தலையை அசைத்துக்கொண்டு சொன்னான் நிகலாய். “அவன் தன்னைப்பற்றி என்னதான் நினைத்திருக்கிறானோ? வானம்பாடியென்று நினைப்பு போலிருக்கிறது! அவர்கள் அவனைக் கூண்டில் பிடித்து அடைத்துவிட்டார்கள்; அந்த வானம்பாடியோ உள்ளேயிருந்து கொண்டு பாட்டுப்பாடுகிறது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் படுகிறது. நான் என் வீட்டுக்குப் போக விரும்பவில்லை !”

“வீட்டுக்குப் போய்த்தான் ஆகப்போகிறதென்ன,” என்று முனகினாள் தாய். ‘காலியான வீடு, எரியாத அடுப்பு, எல்லாம் குளிர்ந்து விறைத்துக் கிடக்கும்.....”

அவன் பதில் சொல்லவில்லை. கண்களை மட்டும் சுருக்கிச் சுழித்தான். பிறகு தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான். தன் முன்னே திரிதிரியாகப் பறந்து செல்லும் புகை மண்டலத்தை ஒரு சோம்பேறி நாயைப் போல வெறுமனே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் நிகலாய்.

“ஆமாம். எல்லாமே குளிர்ந்து போய்த்தான் கிடக்கும். தரையில் பாச்சைகள் செத்து விறைத்துக் கிடக்கும். எலிகள்கூட செத்துக்கிடக்கும் பெலகேயா நீலவ்னா, இன்று இரவு நான் இங்கே கழிக்கிறேனே, முடியுமா?” என்று அவளைப் பார்க்காமலேயே கரகரத்துப் பேசினான் அவன்.

“தாராளமாய். இதற்குக் கேட்க வேறு வேண்டுமா?” என்று அவசர அவசரமாகப் பதிலளித்தாள் அவள். அவனது முன்னிலையில் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

“இந்தக் காலத்திலே, பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்காகக் கூட வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.....”

“என்ன?” என்று திடுக்கிட்டு அதிசயத்தோடு கேட்டாள் தாய்.

அவன் அவளைப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டான். அப்போது அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகத்தில் கண்களும் குருடாகிப் போய்விட்டன் போலத் தோன்றியது.

“இல்லை. பெற்றோர்களைக் கண்டு கூட பிள்ளைகள் வெட்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொன்னேன்” என்று பெருமூச்சுடன் பதிலளித்தான் அவன், ‘பாவெல் உன்னைக் கண்டு வெட்கப்படவில்லை. நானோ என் தந்தைக்காக வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நான் இனிமேல் அவன் வீட்டில் காலடிகூட எடுத்துவைக்க மாட்டேன். எனக்கு அப்பனே கிடையாது. எனக்கு