பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

மக்சீம் கார்க்கி


'என் உருவைக் கண்ணாடியில் பார்த்தே எவ்வளவோ காலமாகிவிட்டது. என் மூஞ்சியில் விழிக்கக்கூட யாரும் துணிய மாட்டார்கள்!” என்ற ஒரு வறட்டுப் புன்னகையோடு சொல்லிக் கொண்டான்.

‘உன் முகத்தைப்பற்றி இப்போது ஏன் கவலைப்பட ஆரம்பித்தாய்?” என்ற நிகலாயைக் கூர்ந்து கவனித்தவாறே கேட்டான் அந்திரேய்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சாஷா சொன்னாள்.’

‘அபத்தம்!” என்று கத்தினான் ஹஹோல்’ அவள் மூக்கோ மீன் பிடிக்கிற தூண்டில் முள் மாதிரி இருக்கிறது; கன்னத்தின் எலும்புகளோ கத்திரிக்கோலைப்போல் இருக்கிறது. ஆனால் அவள் உள்ளமோ நட்சத்திரம் போல் ஒளிவிடுகிறது. அகத்தின் அழகாவது, முகத்தில் தெறிவதாவது?’

நிகலாய் அவனைப் பார்த்தான்; சிரித்தான்.

அவர்கள் தேநீர் அருந்த உட்கார்ந்தனர்.

நிகலாய் ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்தான்: ஒரு ரொட்டித் துண்டின் மீது அமிதமாக உப்பைத் தடவிக்கொண்டான். பிறகு மெதுவாக, ஒரு எருதைப்போல், அசைபோட்டுத் தின்னத் தொடங்கினான்.

“சரி, இங்கே நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது?” என்று தன்வாய் நிறைய ரொட்டித் துண்டு நிரம்பியிருக்கும் போதே கேட்டான் அவன்.

தொழிற்சாலையில் தங்கள் பிரச்சாரம் எப்படி வலுப்பெற்று வருகிறது என்ற விவரத்தை உற்சாகத்தோடு எடுத்துரைத்தான் அந்திரேய். ஆனால் நிகலாயோ அதைக்கேட்டு மகிழ்வுறவில்லை; சோர்வடைந்தான்.

‘ரொம்பநாள் இழுத்தடிக்கிறது. இந்த ஆமைவேகம் கூடாது, அசுர வேகம் வேண்டும்!”

தாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்: திடீரென ஒரு வெறுப்புணர்ச்சி அவள் மனதில் கிளர்ந்தெழுந்தது.

“வாழ்க்கை என்பது குதிரையல்ல, நீ அதைச் சவுக்கால் அடித்து விரட்டமுடியாது!” என்றான் அந்திரேய்.

நிகலாய் தன் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டான்.

“எவ்வளவு காலம்? என்னால் பொறுத்திருக்கவே முடியவில்லையே! நான் என்ன செய்வேன்?”