பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

161


ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து அவன் ஹஹோலின் முகத்தை நிராதரவான பாவத்தோடு பார்த்தான்.

“நாம் அனைவரும் இன்னும் கற்கவேண்டும்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய காரியம்’ என்று தலையைக் குனிந்தவாறே சொன்னான் அந்திரேய்.

“நாம் எப்போதுதான் சண்டைக்குக் கிளம்புவது?” என்றான் நிகலாய்.

“நாம் போருக்குக் கிளம்புவது எப்போது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அப்படிக் கிளம்புவதற்கு முன்னால், நாம் நம் எதிரிகளிடம் எத்தனையெத்தனையோ தடவை உதை படத்தான் செய்வோம். அது மட்டும் எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல், “இருக்கிற நிலையைப் பார்த்தால், நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நமது மூளையைத்தான் முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.”

நிகலாய் மீண்டும் சாப்பிடத் தொடங்கினான்; அவனது அகன்ற முகத்தைக் கள்ளத்தனமாக ஓரக் கண்ணிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய். அவனைக் கண்டதும் தனக்குள் ஏற்படும் வெறுப்புணர்ச்சியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கனத்த சதுர உருவத்தில் ஏதோ ஒரு அமைதியைத் தேடுபவள் போலத் தோன்றினாள் அவள்.

திடீரென்று நிமிர்ந்து நோக்கிய அவனது சிறிய கண்களின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அவளது புருவங்கள் நெளிந்தன. அந்திரேய்க்கு அங்கு இருக்கவே நிலை கொள்ளவில்லை. எனவே அவன் வாய்விட்டுச் சிரித்தான், பிறகு பேசினான். பேச்சை இடையிலே நிறுத்திவிட்டு சீட்டியடித்துக் கொண்டிருந்தான்.

அவனது அமைதியின்மையின் காரணத்தைத் தாய் உணர்ந்து கொண்டதாகத் தோன்றியது. நிகலாய் வாய்மூடி மௌனியாகி அசையாது உட்கார்ந்திருந்தான். ஹஹோல் ஏதாவது பேசினால் மட்டும் அதை எதிர்த்து வறட்டுத்தனமாக பொறுப்பற்று ஏதேனும் பதில் கூறிக்கொண்டிருந்தான் அவன்.

அந்தச் சிறிய அறை அந்திரேய்க்கும் தாய்க்கும் நெரிசலாய் வசதிக் குறைவாயிருந்தது. என்வே அவர்கள் இருவரும் ஒருவர் மாற்றியொருவர் தங்கள் விருந்தாளியைப் பார்த்தார்கள்.