பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

163



21

வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது. பற்பல சம்பவங்கள் நிறைந்து துரிதமாக, நாட்கள் போவதே தெரியாமல், காலம் கழிந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் கொண்டு வந்தது. ஆனால் தாய் அவற்றைக் கேட்டுத் திடுக்கிடவில்லை. அவளுக்கு அவை பழகிப்போய்விட்டன. அவளது வீட்டுக்கு மேலும் மேலும் இனந்தெரியாத புதிய நபர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மாலை நேரங்களில் வந்து அந்திரேயோடு ஆர்வமும் அடக்கமும் நிறைந்த குரல்களில் பேசிக்கொள்வார்கள். பிறகு தங்கள் கோட்டுக் காலர்களைத் தூக்கிவிட்டுக்கொண்டும், தொப்பிகளைக் கண் வரையிலும் இழுத்து மூடிக்கொண்டும் இருளோடு இருளாய் அரவமேயில்லாது அதி ஜாக்கிரதையோடு மறைந்து போய்விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ளடங்கித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தை அவளால் உணர முடிந்தது. அவர்கள் அனைவருக்குமே ஆடிப்பாடிச் சிரித்து மகிழ வேண்டும் என்ற ஆசையிருப்பதுபோலத் தெரிந்தது; எனினும் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை. அவர்கள் எப்போதும் எங்கேனும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடுமையாகவும், ஏளன சுபாவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் வாலிபத்தின் வலிவும், மினுமினுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்பட்டார்கள், சிலர் மிகவும் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே ஒரேவிதமான லட்சிய நம்பிக்கையோடு ஒத்து நிற்பதாகத் தாய்க்குத் தோன்றியது. எனினும் அவர்கள் அனைவரும் தனித்தனியே தமக்கென ஒரு உருவும் குணமும் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் அனைவரது முகங்களும் அவளுக்கு ஒன்று போலவே தோன்றின; எம்மாஸை நோக்கிச் செல்லும் கிறிஸ்து நாதரின் அருள் நாட்டத்தைப் போல், அன்பும் அழுத்தமும் பிரதிபலிக்கும். ஆழமும் தெளிவும் கருமையும் கொண்ட கண்களோடு அமைதியும் தீர்மான புத்தியும் நிறைந்து விளங்கும் மெலிந்த முகத்தைப் போல் ஒரே முகம்போல் தோன்றியது அவளுக்கு.

அவர்களின் தொகையை எண்ணிக் கணக்கிட்டாள் தாய். அவர்கள் அனைவரையும் பாவெலைச் சுற்றி நிற்க வைத்து அவர்களுக்கு மத்தியில் பாவெலை நிறுத்தி வைத்தால், பாவெல் எதிரிகளின் கண்ணில் படாமல் எப்படி அந்த வியூகத்துக்குள்ளேயே மறைந்து நிற்பான் என்பதை அவள் கற்பனாரூபமாகவே சிந்தித்துப் பார்த்துக்கொண்டாள்.