பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

மக்சீம் கார்க்கி


ஒரு நாள் குறுகுறுப்பும் சுருண்ட கேசமும் நிறைந்த ஒரு யுவதி நகரிலிருந்து வந்தாள். அவள் அந்திரேய்க்கு ஒரு பொட்டலம் கொண்டு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது அவள் தாயை நோக்கித் திரும்பி, உவகை நிறைந்த தன் கண்களில் ஒளிபாய்ந்து பளிச்சிட்டு மின்ன, வாய் திறந்து சொன்னாள்;

“தோழரே, போய்வருகிறேன்!”

‘சென்று வருக” என்ற சிரிப்புக்கு ஆளாகாமல் பதிலளித்தாள் தாய்.

அந்தப் பெண் வெளியே சென்ற பிறகு, தாய் ஜன்னல் அருகே சென்று நின்றாள்; வசந்த கால மலர்போல பதுமையும், வண்ணாத்திப் பூச்சிப்யைப்போல மென்மையும் பெற்று, சிறு கால்களால் குறுகுறுவென்று தெரு வழியே நடந்து செல்லும் அந்தத் தோழியைப் பார்த்தாள். பார்த்தவாறே தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“தோழி!” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் தாய். ‘அடி’ என் செல்லப் பெண்ணே! உன் வாழ்க்கை முழுதும் உன்னோடு துணைநின்று உதவ, கடவுள் உனக்கு ஒரு நல்ல உண்மையான தோழனையும் அருள் செய்யட்டும்!”

நகரிலிருந்து வரும் அத்தனை பேரும் ஏதோ பிள்ளைக்குணம் படைத்த பேதைகளைப் போலத் தோன்றியது அவளுக்கு அதைக் கண்டு மிகுந்த பெரியதனத்தோடு அவள் தன்னுள் சிரித்துக்கொள்வாள். என்றாலும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை வைராக்கியம் அவளை ஆனந்த வியப்பில் ஆழ்த்தும்; உள்ளத்தைத் தொடும். அந்த வைராக்கியத்தின் ஆழ்ந்த தன்மையும் அவளுக்கு வரவரப் புரியத் தொடங்கியது. நீதியின் வெற்றியைப் பற்றி அவர்கள் காணும் லட்சியக் கனவுகள் அவளது உள்ளத்தைத் தொட்டுத் தடவிச் சுகம் கொடுத்தன. அந்தக் கனவு மொழிகளை அவள் கேட்கும்போது காரண காரியம் புரியாத ஏதோ ஒரு சோக உணர்ச்சிக்கு அவள் ஆளாகிப் பெருமூச்செறிந்து கொள்வாள். முக்கியமாக, அவர்களது சர்வ சாதாரணமான எளிமையும் தங்களது சொந்த நலன்களில் அவர்கள் காட்டும் அழகான அசட்டை மனப்பான்மையும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன.

வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சொல்லியவற்றை பெரும்பாலும் ஏற்கெனவே அவள் உணர்ந்துகொண்டிருந்தாள். அவர்கள் தாம் மனித குலத்தின் துயரங்களுக்குரிய உண்மையான பிறப்பிடத்தை, மூலாதாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என அவள் உணர்ந்தாள், எனவே அவர்களது சிந்தனைகளையும் அதன் முடிவுகளையும் அவளும்