பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

165


பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப் பழகினாள். என்றாலும், அவளது இதயத்தின் அதல பாதான ஆழத்திலே அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட முடியும் என்பதையோ, தங்களது லட்சியத்துக்காகச் சகல தொழிலாளி மக்களையும் ஒன்று திரட்டி ஒரே சக்தியாகப் பலப்படுத்தி விடுவார்கள் என்பதையோ அவள் நம்பத் துணியவில்லை. இன்றோ ஒவ்வொருவனும் அவனவன் வயிற்றை நிரப்பவே வழி பார்க்கிறான்; அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக்கூட எவனும் விரும்பவில்லை மூமூஇதுதான் அவளுக்குத் தெரியும். தொலைவும் துயரமும் நிறைந்த இந்தப் பாதையில் அதிகம்பேர் துணிந்து செல்ல ஒப்பமாட்டார்கள். இறுதியாக எய்தப்போகும் அனைத்து மக்களின் சகோதரத்துவ சாம்ராஜ்யம் எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்துவிடப் போவதில்லை. எனவேதான் அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசைதாடிகள் வளர்ந்திருந்த போதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை, அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

“அட, என் அருமைக் குஞ்சுகளே!” என்று தலையை அசைத்துக் கொண்டு தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள் அவள்.

இப்போது அவர்கள் அனைவரும் அருமையான, நேர்மையான, தெளிவாற்றல் கொண்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் நன்மை செய்வதைப் பற்றிப் பேசினார்கள், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும் தங்களைப் பற்றிய கவலையின்றியும் அவர்கள் முன்னேறினார்கள். இம்மாதிரியான வாழ்க்கையை, அதனது ஆபத்தான சூழ்நிலையைக்கூடப் பொருட்படுத்தாது எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதையும் அவள் உணர்ந்துகொண்டாள். தன்னுடைய கடந்த காலத்தின் இருள்செறிந்த வாழ்க்கைப் பாதையை அவள் நினைத்து நினைத்துப் பார்த்து பெருமூச்செறிந்துகொண்டாள். அவளது இதயத்துக்குள்ளே, நான் இந்தப் புதிய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவள் என்ற உணர்ச்சியும் சிறுகச் சிறுக வளர ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் தன்னை எவருமே விரும்பவில்லை எனக் கருதினாள் அவள். ஆனால், இப்போதோ எத்தனையோ பேருக்குத் தான் தேவைப்படுவதை அவள் கண்கூடாகப் பார்த்தாள். இந்தப் புதிய இன்பகரமான உணர்ச்சி அவளைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது.

அவள் தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை ஒழுங்காகக் கொண்டு சென்றுகொண்டிருந்தாள்; அப்படிச் செய்வது தன் கடமை