பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

171


என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால், நீ உன் வாழ்க்கை முழுவதையும் எப்படிப் பொறுத்துச் சகித்து ஏற்றுவந்தாயோ, அது போலவே மௌனமாகப் பொறுத்துவிடுவாய் என்றுதான் நான் நினைத்தேன். அதுவே எனக்குச் சங்கடமாயிருந்தது.”

“அந்திரியூஷா எனக்கு எவ்வளவோ விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவி செய்தான்” என்றாள் அவள்.

“அவன் உன்னைப்பற்றிச் சொன்னான்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

“இகோரும் கூடத்தான். அவனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அந்திரியூஷா எனக்கு எழுதப்படிக்கக்கூடக் கற்றுக்கொடுக்க விரும்பினான்.”

“ஆனால் நீ வெட்கப்பட்டுப்போய், யாருக்கும் தெரியாமல் இரகசியத்தில் எழுதப் படிக்க முனைந்தாய். இல்லையா?”

“அதுகூட அவனுக்குத் தெரியுமா?” என்று வியந்தாள் அவள். தனது இதயத்தில் பொங்கிய ஆனந்தத்தோடு அவள் பாவெலை நோக்கிச் சொன்னாள்.

“அவனை உள்ளே கூப்பிடு நம்மிருவருக்கும் இடையில் தானும் இருக்கவேண்டாம் என்றுதான் அவன் வெளியே போனான். பாவம், அவனுக்கு என்று ஒரு தாய் இல்லை.....”

“அந்திரேய்!’ என்று வாசற்கதவைத் திறந்துகொண்டே கூப்பிட்டான் பாவெல்; “நீ எங்கே இருக்கிறாய்?”

“இங்கேதான். கொஞ்சம் விறகு தறிக்க வேண்டும்..”

“வா இங்கே!”

அவன் உடனே வந்துவிடவில்லை. சிறிது நேரம் கழித்து சமையல் கட்டுக்குள் வந்து வீட்டு விஷயங்களைப் பேசத் தொடங்கினான்:

“நிகலாயிடம் சொல்லி கொஞ்சம் விறகு கொண்டுவரச் சொல்லவேண்டும். இங்கு விறகு அதிகமில்லை. அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.”

தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் இன்னும் ஆனந்தத்தில்தான் திளைத்திருந்தாள். அவளது இதயம் இன்பகரமாகத் துடித்தது என்றாலும் தன் மகனை அவனது வழக்கமான அமைதியில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வ உணர்ச்சி அவளுக்கு உந்தியெழுந்தது.