பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

மக்சீம் கார்க்கி


அவர்கள் விவாதித்துக்கொள்வதைக் கேட்ட தாய்க்கு, ஒன்று, மட்டும் புரிந்தது. விவசாய மக்களால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லையென்பது பாவெலின் கட்சி. எது உண்மை, எது நியாயம் என்பதை முஜீக்குகளுக்கும் கற்றுக்கொடுக்க முயலத்தான் வேண்டும் என்பது ஹஹோலின் கட்சி, அவளுக்கு அந்திரேயின் வாதம்தான் புரிந்தது. அவன்தான் உண்மையோடு ஒட்டி நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. எனவே, அவன் பாவெலிடம் பேசத்தொடங்கும் போதெல்லாம் அவள் ஆர்வத்தோடும் பாதுகாப்புணர்ச்சியோடும் அவன் பேச்சைக் கவனித்துக் கேட்டாள். ஹஹோலின் பேச்சு பாவெலைப் புண்படுத்திவிடவில்லை என்பதைத் தன் மகனது பதிலைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடியும் என்று கருதி, மகனது பதிலுக்காக மூச்சுக்கூட விடாமல் காத்திருந்து பார்த்தாள் தாய். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் விபரீதமாகவோ குற்றமாகவோ கருதாமல் காரசாரமாக இருவரும் கத்திக்கொண்டிருந்தார்கள்.

சமயங்களில் தாய் தன் மகனைப் பார்த்துச் சொல்லுவாள்:

“அப்படியா பாவெல்?”

அவனும் ஒரு சிறு புன்னகையோடு பதிலளிப்பான்:

“ஆமாம். அப்படித்தான்.”

“ஆஹா. என் அன்பே” என்று சிநேக பாவமான கிண்டலோடு பேசத் தொடங்கினான் ஹஹோல். “கனவானே, நீங்கள் வயிறுமுட்டச் சாப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நன்றாக அசைபோட்டுத்தான் தின்னவில்லை. அதனால் தொண்டைக்குழியில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது; முதலில் அதைக் கழுவித் துடைத்துவிட்டு வருக.”

“என்னை அசடாக்கப் பார்க்காதே” என்றான் பாவெல்,

“விளையாட்டில்லை அப்பனே!”

தாய் சிரித்தவாறே, தலையை ஆட்டிக்கொண்டாள்.

23

வசந்தம் வந்தது: பனிப்பாறைகள் உருகி வழிந்தோட ஆரம்பித்தன; மீண்டும் சேறும் புழுதியும் நிறைந்த தரை மட்டும் மிஞ்சியது. நாளுக்குநாள் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது; அந்தக் குடியிருப்பு முழுவதுமே கழுவப் பெறாமல், கந்தல் கந்தலாகிப்போன துணிகளால் போர்த்தப்பட்டிருப்பதுபோலத்