பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

177


"அப்படித்தான் அம்மா, அப்படித்தான்! சரித்திரத்தின் உயிர் நாடியையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள். நீங்கள் சொன்ன சித்திரம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் ஒட்டு வெட்டு வேலை செய்து மிகைப்படுத்தி அலங்காரம் பண்ணிவிட்டீர்கள் என்றாலும் நீங்கள் சொன்னவற்றிலெல்லாம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொந்தி விழுந்த குள்ள மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள்தான் மகா பாதகர்கள். மக்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் விஷப் பாம்புகள். பிரெஞ்சுக்காரர்கள் இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால்— ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.”

“நீங்கள் பணக்காரர்களைத்தானே சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

“அவர்களையேதான். அதுதான் அவர்களது துரதிருஷ்டம்! ஒரு - சின்னஞ்சிறு, குழந்தையின். உணவில் தாமிரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர்த்து ஊட்டிவந்தால், அந்தத் தாமிரம் அந்தப் பிள்ளையின் எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அந்தப் பிள்ளை குள்ளப் பிறவியாகவே போய்விடுகிறது. ஆனால், ஒருவனை தங்கம் என்று விஷத்தை ஊட்டி வளர்த்தாலோ? அப்போது அவன் இதயமே குன்றிக் குறுகி உணர்ச்சியற்றுச் செத்துப் போய்விடும்; பிள்ளைகள் ஐந்து காசுக்கு வாங்கி விளையாடுகிறார்களே ரப்பர் பந்து, அந்த மாதிரிப் போய்விடும்!”

ஒரு நாள் இகோரைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பாவெல் சொன்னான்:

“அந்திரேய்! உண்மை என்ன தெரியுமா? எந்த மனிதன் சிரித்துச் சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது. இதுதான் வழக்கம்.”

ஹஹோல் பதில் சொல்வதற்கு ஒரு கணம் தயங்கினான்; கண்களைச் சுருக்கி விழித்தான்.

“நீ சொல்கிறபடி பார்த்தால், ருஷ்ய தேசம் முழுவதுமே சிரித்துச் சிரித்து வயிறு வெடித்துச் சாகத்தான் வேண்டும்!”

நதாஷா வந்து சேர்ந்தாள். அவளும் சிறையிலிருந்துதான் வந்தான். ஆனால் வேறு ஒருநகரிலுள்ள சிறையில் இருந்தாள். சிறை வாசம் அவளை எந்த விதத்திலும் மாற்றிவிட்டதாகத் தெரியவில்லை. அவளது முன்னிலையில் ஹஹோல் வழக்கத்துக்கு மீறிய உற்சாகத்துடன்