பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

மக்சீம் கார்க்கி


நடந்துகொள்வதாகத் தாய்க்குத் தோன்றியது. அவன் ஒவ்வொருவரையும் கேலியும் கிண்டலுமாக பேசினான்; அவளை வாய்விட்டுக் கலகலவென்று சிரிக்க வைத்தான். ஆனால் அவள் சென்ற பிறகு, அவன் தனது வழக்கமான சோக கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டு, கால்களை இழுத்து இழுத்துப்போட்டு அறைக்குள் குறுக்கும் மறுக்கும் நடக்கத் தொடங்கினான்.

காஷாவும் அடிக்கடி வந்துகொண்டிருந்தாள். அவள் வரும்போதெல்லாம் புருவங்களைக் கழித்தபடி ஒரே பரபரப்போடுதான் வருவான். என்ன காரணத்தாலோ அவனது முகபாலம் எப்போது பார்த்தாலும் ஒரே வக்கிரமும் முறைப்பும் கொண்டதாகவே இருந்தது.

ஒரு முறை அவளை வழியனுப்பிவிட்டு வருவதற்காக பாவெல் வாசல் தடைவரைக்கும் போனான். போகும்போது அவன் கதவைச் சாத்தாமல் விட்டுவிட்டுப் போனதால் அவர்கள் வெளியே பேசிக்கொண்ட பேச்சு தாயின் காதிலும் விழுந்தது.

“நீங்கள்தான் கொடியைச் சுமந்து கொண்டு போகப் போகிறீர்களா?” என்று கேட்டான் சாஷா.

“ஆமாம்,”

“முடிவாகிவிட்டதா?”

“ஆம், அது என் உரிமை.”

“மீண்டும் சிறைக்குப் போகவா?”

பாவெல் பதில் பேசவில்லை

“நீங்கள் போகாமலிருக்க முடியாதா...” என்று ஆரம்பித்தாள் அவள், ஆனால் வார்த்தை தடைப்பட்டது.

“என்னது?”

“இல்லை. அந்தப் பொறுப்பை வேறு யாருக்காவது விட்டு விடுங்களேன்.”

“இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் அவன்

“நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள். நஹோத்கா நீங்களும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். நீங்கள் வெளியில் இருந்தால், எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால், கொடியைத் தாங்கி நீங்களே சென்றால், அவர்கள் நிச்சயம் உங்களைக் கைது செய்வார்கள். வெகு தூரத்துக்கு, வெகு காலத்துக்கு நாடு கடத்திவிடுவார்களே!”