பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

181


"எனக்குப் புரிகிறது. நீ வேறு ஒன்றுமே செய்ய முடியாது. உன் தோழர்களுக்காக, நீ இப்படிச் செய்யத்தான் வேண்டும்......”

“இல்லை. எனக்காகவேதான்!” என்றான் அவன்.

அந்திரேய் வாசல்நடைக்கு வந்தான். வாசல் நடை அவன் உயரத்துக்குச் சிறிதாக இருந்ததால், அவன் தன் கால்களை ஓரளவுக்குச் சரித்து நின்றுகொண்டான். கதவு நிலையிலே தோளைக் சாய்த்து, மற்றொரு தோளையும் தலையையும் முன்புறமாக நீட்டிக்கொண்டு நின்றான்.

“மகாப்பிரபு! இந்த எண்ணத்தைக் கைவிடுவதால் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை” என்று தனது அகன்ற கண்களைப் பாவெலின் மீது பதித்துப் பார்த்துக்கொண்டே சொன்னான் அவன். ஏதோ ஒரு கல்லிடுக்கிலிருந்து எட்டிப் பார்க்கும் பல்லியைப் போலிருந்தது அவன் நின்ற நிலை.

தாயோ அழுது கொட்டத் தயாராக நின்றாள்.

“அட கடவுளே, மறந்துவிட்டேனே” என்று சொல்லிக்கொண்டே அவள் வாசல் நடையைக் கடந்து வெளியே வந்தாள். தான் அழுவதைத் தன் மகன் பார்த்துவிடக் கூடாது என்றுதான் அவள் அப்படிச் செய்தாள், வெளியே வந்ததும் அவள் ஒரு மூலையில் தலையைச் சாய்த்துக்கொண்டு வெளிக்குத் தெரியாமல் பொருமிப் பொருமி அழுதாள். அவளது இதயத்தின் செங்குருதியே அவளது கண்ணீரோடு கலந்து கொட்டிப் பெருகுவதுபோல் அவள் உணர்ந்தாள்.

மூடியும் மூடாமலும் கிடந்த கதவின் வழியாக அவர்கள் இருவரும் தணிந்த குரலில் விவாதித்துக்கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.

“இது என்னப்பா வேலை? அவளைத் துன்புறுத்துவதில் உனக்கொரு ஆனந்தமா?” என்று கேட்டான் ஹஹோல்.

“இதுபோல் பேச உனக்கு உரிமை கிடையாது” என்று கத்தினான் பாவெல்.

“சரிதான். நீ உன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை நான் மூச்சுக்காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தால், நான் அருமையான நண்பன்தானப்பா. நீ என் அப்படிச் சொன்னாய்? உனக்கு எதுவுமே புரியாதோ”.

அதெல்லாமில்லை, எதுவானாலும் சரி. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராய்ச் சொல்லிவிட வேண்டும்; பயப்படக் கூடாது.”

“அவளுக்குக் கூடவா?”