பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

மக்சீம் கார்க்கி


"எல்லோருக்கும் தான்! பாசமாகட்டும். நேசமாகட்டும். அது என் காலைக்கட்டி என்னை முன்னேறவிடாமல் தடுக்குமானால், அவற்றை நான் விரும்பவே இல்லை......”

“அடாடா! வீராதி வீரன்! போய் மூக்கைத் துடைத்துக்கொள். இதையெல்லாம் சாஷாவிடம் போய்ச் சொல். அவள் தான்...”

“அவளிடம் ஏற்கெனவே சொல்லியாயிற்று”

“சொல்லிவிட்டாயா? பொய் சொல்கிறாய். நீ அவளிடம் மிருதுவாகப் பேசினாய். அன்போடு பேசினாய். நான் கேட்காவிட்டாலும் எனக்கு அது தெரியும். ஆனால் நீ உன் சூரத்தனத்தையெல்லாம் உன் தாயிடம் வந்து காட்டுகிறாய். ஆனால், உன் சண்டப்பிரசண்டமெல்லாம் சல்லிக் காசுக்குப் பிரயோஜனமில்லை.”

பெலகேயா தன் கன்னங்களில் வழிந்தோடிய கன்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஹஹோல் ஏதாவது கடுமையாகப் பேசிவிடப் போகிறானோ என்ற பயத்தில் அவள் அவசர அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு சமையலறைக்குள் வந்தாள்.

“புர்..... ர்...... அப்பப்பா ! என்ன குளிர்?” என்று சத்தமாகச் சொன்னாள். எனினும் அவள் குரலில் பயமும் சோகமும் கலந்து நடுங்கிற்று. “இதை வசந்த காலம் என்றே சொல்ல முடியாது!”

அடுத்த அறையிலே கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சுக் குரலை மூழ்கடிப்பதற்காக அவள் சட்டியையும் பெட்டியையும் அப்படியும் இப்படியும் உருட்டி அரவம் உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.

“எல்லாமே மாறிப்போய்விட்டது” என்று அவள் மேலும் உரத்த குரலில் பேசத் தொடங்கினான். “மக்கள் புழுங்கித் தவிக்கிறார்கள்; சீதோஷ்ணம் என்னவோ குளிர்ந்து வெடவெடக்கிறது. இந்த மாதத்திலெல்லாம் சூரிய வெப்பம் உறைப்பதுதான் வழக்கம். நல்ல வெயிலும், நிர்மலமான வானமும்......”

பேச்சுக்குரல் நின்றுவிட்டது. எனவே தாய் சமையலறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு என்ன நடக்கிறது. என்று காது கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினாள்.

ஹஹோல் மீண்டும் மெதுவாகப் பேசினான்: “நீ அதைக் கேட்டாயா? இதற்குள்ளாகவே உன் புத்தியில் பட்டிருக்க வேண்டும். அதை விட்டுத்தள்ளு உன்னைவிட அவளுக்குப் புத்தி அதிகம். தெரிந்ததா?”

“கொஞ்சம் தேநீர் சாப்பிடுங்களேன்” என்று நடுநடுங்கும் குரலில் கேட்டாள் தாய். தன் குரலில் தோன்றிய நடுக்கத்தை உடனடியாய்