பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

மக்சீம் கார்க்கி


“பூ! அவளை நான் அதட்டுகிறதாவது? அவன் என்னிடம் உதைபட வேண்டியது ஒன்று தான் பாக்கி!” என்று திரும்பிப் பார்க்காமலேயே கத்தினான் ஹஹோல்.

அவள் அவனிடம் நேராகச் சென்று, தன் கரத்தை நீட்டினாள்.

“நீ எவ்வளவு நல்லவன்....”

ஹஹோல் திரும்பினான்; உடனே தன் தலையை ஒரு மாட்டைப் போல கவிழ்ந்து வைத்துக்கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டும் சமையலறையை நோக்கி நடந்தான். எகத்தாளமாக அவன் குத்திப் பேசுவது தாயின் காதில் ஒலித்தது.

“பாவெல். ஓடிப்போய்விடு, உன் தலையை நான் கிள்ளித் தூர எறிவதற்குள் போய்விடு! அம்மா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் பயந்துபோய்விடாதீர்கள். நான் இங்கே தேநீருக்குத் தண்ணீர் போடுகிறேன், வேறொன்றுமில்லை. அடடே அருமையான அடுப்புக் கரி இருக்கிறதே-ஊறப்போட்ட கரியா?”

அவன் மெளனமாளான், தாய் சமையலறைக்குள் நுழைந்தபோது, அவன் அடுப்புக்கு எதிராக இருந்து உலையை ஊதிக்கொண்டிருந்தான்.

“பயப்படாதீர்கள். அம்மா, அவனை நான் தொடவேமாட்டேன்” என்று தலையை திருப்பாமலே சொன்னான் ஹஹோல்: “நான் ரொம்ப சாது, வெந்துபோன கிழங்கு மாதிரி. அப்புறம் ஏ, வீரசூரா, நீ இதை ஒன்றும் கேட்க வேண்டாம். தெரிந்ததா? உண்மையிலேயே. எனக்கு அவன்மீது ரொம்பப் பிரியம். ஆனால் அவன் போட்டிருக்கிறானே, ஒரு கையில்லாச் சட்டை, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை, அவனுக்கு அந்தப் புதுச் சட்டைமேலே ஒரே மோகம், அதைப் போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் அதையே போட்டுக்கொண்டு தொப்பையைத் தள்ளிக்கொண்டு போகிறதும் வருகிறதும். ஒவ்வொருவனையும் வழிமறித்து, ‘பார்த்தாயா? எவ்வளவு அருமையான சட்டை’ என்று பெருமை பீற்றிக்கொள்கிறதும்தான் அவனுக்கு வேலையாய்ப் போயிற்று. நன்றாய்த் தானிருக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருத்தனையும் இடித்துக்கொண்டு செல்லாவிட்டால் என்ன? ஏற்கெனவே இங்கு நெரிசல்.”

“ஏய்! எவ்வளவு நேரம்தான் நீ இப்படிக் கதை அளக்கப் போகிறாய்?” என்று சின்னச் சிரிப்போடு கேட்டான் பாவெல், “நீதான் எனக்கு ஒரு தடவை புத்தி சொல்லியாயிற்றே. இன்னும் என்ன?”

ஹஹோல் தரையிலே உட்கார்ந்து தன்னிரு கால்களையும் அடுப்புக்கு இருபுறமும் நீட்டிப் போட்டுக் கொண்டு அவனைப்