பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

185


பார்த்தான். தாய் வாசல் நிலையருகில் நின்று அந்திரேயின் பின் தலையை அன்பு ததும்பக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னிரு கைகளையும் பின்னால் ஊன்றியவாறு உடலைத் திருப்பி, பாவெலையும் தாயையும் பார்த்தான்.

“நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நன்றாயிருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே ஓரளவு சிவந்து கன்றிப்போயிருந்த தன் கண்களை இமை தட்டிக்கொண்டான்.

பாவெல் குனிந்து அவன் கையைப் பிடித்தான்.

“அடடே. இழுக்காதே. என்னைக் கீழே தள்ளிவிடுவாய்” என்றான் ஹஹோல்.

“எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்; “நீங்கள் இரண்டுபேரும் கட்டித் தழுவி முத்தமிடுங்கள்.”

“என்ன, இந்த யோசனை எப்படி?” என்று கேட்டான் பாவெல்.

“பேஷாய் வா இப்படி” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ஹஹோல்.

அவர்கள் இருவரும் கட்டித் தழுவினார்கள். ஈருடலும் ஓருயிருமாக அங்கு நட்பு பிரகாசித்தது. தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இது அழுகைக் கண்ணீர் அல்ல, ஆனந்தக் கண்ணீர்!

“பெண்களுக்கு அழுவதில் பிரியம்” என்று வழிந்த கண்ணீரை வெட்க உணர்ச்சியோடு துடைத்துக்கொண்டே பேசத் தொடங்கினாள் தாய், “அவர்கள் ஆனந்தம் வந்தாலும் அழுவார்கள், துக்கம் பொங்கினாலும் அழுவார்கள்,...”

ஹஹோல் பாவெலை மெதுவாக விலக்கிவிட்டான்.

“போதும்” என்று கூறிக்கொண்டே, தனது கண்களையும் துடைத்துவிட்டுக்கொண்டான் அவன். “ஆடி முடிந்துவிட்டது கன்றுக்குட்டி, இனி வெட்டிப் போடுவோம் வேகவைக்க. உன் அடுப்புக் கரியை உடைப்பிலேதான் கொண்டு போடவேண்டும். ஊதி ஊதி என் கண்களில்தான் கரி விழுந்து போயிற்று!”

“இந்த மாதிரிக் கண்ணீருக்கு வெட்கப்படவே தேவையில்லை!” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஜன்னலருகே சென்று உட்கார்ந்தான் பாவெல்.

அவனது தாய் அவனருகே சென்று உட்கார்ந்தாள். அவளது இதயத்தில் புதிய தைரியம் நிறைந்திருந்தது. அந்தத் துணிச்சலினால், அவளது துக்கம் ஒருபுறமிருக்க, அவளது மனம் நிறைவும் நிம்மதியும் பெற்று விளங்கியது.