பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

மக்சீம் கார்க்கி


“அம்மா, நீங்கள் ஒன்றும் எழுந்திருக்க வேண்டாம். நானே எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே அந்த அறையை விட்டு அடுத்த அறைக்கு வந்தான் ஹஹோல். “கொஞ்ச நேரம் சும்மா இருங்கள். உங்கள் இதயத்தை இந்த மாதிரிப் பிழிந்தெடுத்த பிறகு கொஞ்சம் ஓய்வு தேவைதான்...”

அவனது செழுமை நிறைந்த குரல் மீண்டும் அவர்களிடையே ஒலிக்க ஆரம்பித்தது.

“இப்போது நாம் வாழ்க்கையிலேயே ஒரு புதிய ருசியைக் கண்டோம். மனித வாழ்க்கையிலேயே ஒரு புதிய சுகத்தை அனுபவித்தோம்!”

“ஆமாம்”, என்று தன் தாயைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

“இந்த அனுபவம் எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது” என்றாள் அவள்; “நம்முடைய துன்பமும் வேறு, இன்பமும் வேறு....”

“அப்படித்தானம்மா இருக்க வேண்டும்” என்றான் ஹஹோல் “என் அருமை அம்மா! இன்று ஒரு புதிய இதயம் பிறந்தது. புதிய இதயம் வாழ்வு கண்டது. மனிதன் முன்னேறிச் செல்கிறான்; பகுத்தறிவினால் அனைத்தையும் ஒளிரச் செய்தவாறே முன்னேறுகிறான். போகும்போதே “சர்வதேசத்தின் மக்கள் கூட்டமே! ஒரே குடும்பமாக ஒரே இனமாக ஒன்று சேருங்கள்!” என்று அறைகூவி அழைக்கிறான். அவனது அறைகூவலுக்கு எதிரொலியாக, உறுதிவாய்ந்த சகல இதயங்களும் ஒன்றுகூடிக் கலந்து மாபெரும் பேரிதயமாகி மகத்தான பலம் பெற்று மணிநாதமாக ஒலிக்கின்றன....”

நடுங்கித் துடிதுடிக்க முயலும் தன் உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டாள் தாய். அழுகை முட்டிக்கொண்டு வரும் தன் கண்களையும் அவள் இறுக மூடிக் கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டாள்.

பாவெல் ஏதோ பேசப் போவதைப்போல் கையை உயர்த்தினான். ஆனால் தாய் அவனைத் தன்பக்கம் இழுத்து மெதுவாக இரகசியமாகச் சொன்னாள்:

“அவன் பேசட்டும். நீ குறுக்கிடாதே” என்று குசுகுசுத்தாள்.

ஹஹோல் எழுந்து வந்து கதவருகே நின்றுகொண்டான்.

“மக்கள் இன்னும் எத்தனையெத்தனை துன்பங்களையோ பார்க்கப் போகிறார்கள். எவ்வளவோ இரத்தத்தை இன்னும் சிந்திப் பெருக்கப் போகிறார்கள். என்னுடைய இதயத்திலும் என்னுடைய அறிவிலும் நான் கொண்டிருக்கும் வேட்கைக்கு என்னுடைய