பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

187


துயரங்கள் எம்மாத்திரம்? என் உடம்பில் உள்ள இரத்தம்தான் எம்மாத்திரம்? இவை போதாது. நான் ஒளிக்கிரணம் வீசும் தாரகையைப் போல் இருக்கிறேன். நான் எதையும் தாங்க முடியும்; எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஏனெனில், “என் இதயத்தினுள்ளே பெருகும் பேரானந்தத்தை எந்தச் சக்தியும், எவரும் அழித்துத் துடைத்துவிட முடியாது. அந்தப் பேரானந்தத்தில்தான் என்னுடைய முழுபலமும் அடங்கியிருக்கிறது!”

அவர்கள் நடுதிசிவரையில் உட்கார்ந்து தேநீர் பருகினார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.

எப்போதாவது ஒரு கருத்து தனக்குத் தெளிவாகிப் புரியும் சமயத்தில், தாய் தனது கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்செறிந்து கொள்வாள். அந்தக் கருத்தை நன்கு உணர்ந்து கொள்வதற்காக, அதைத் தனது துன்பம் நிறைந்த இங்கிதமற்ற பழைய வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்வாள்.

அவர்களது உரையாடலிருந்து உற்சாகத்தில் அவளது பயபீதிகளெல்லாம் மறைந்தோடிப் பறந்துவிட்டன. அன்று, அவளது தந்தை அவளைப் பார்த்துக் கடுமையாகக் கூறியபொழுது தோன்றிய அந்த உணர்ச்சி மீண்டும் அவளிடம் தோன்றியது.

“முகத்தைச் சுழிப்பதிலே எந்தப் பிரயோசனமும் இல்லை. எவனோ ஒருவன்; முட்டாள்தனமாக, உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு முன் வந்து விட்டானோ, உடனே அவனை ஏற்றுக்கொள்; சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எல்லாப் பெண்களும் கல்யாணம் செய்துதான் தீர வேண்டும். கல்யாணம் பண்ணி, குழந்தைகளைப் பெற்றுப்போட வேண்டியதுதான் தலைவிதி, குழந்தைகளோ ஒரே தொல்லைபிடித்த பாரச் சுமைதான். எல்லோரையும் போன்ற மனிதப் பிறவிதானே நீயும்?” என்று கூறினார் அவளது தந்தை.

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அவளது கண் முன்னால் ஏதோ ஒரு தப்பிக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரே ஒரு மார்க்கம்தான் தோன்றுவது போலவும், அந்தப் பாதையே அவள் முன்னால் இருண்டு வெறிச்சோடிக் கட்டாந்தரையாக நீண்டுகிடப்பது போலவும் தோன்றியதுண்டு. அந்தக் தவிர்க்க முடியாத நெடு வழியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளது இதயத்தில் ஒரு குருட்டு அமைதியை உண்டாக்கியது. இன்றும் அதுபோலவே இருந்தது அவளுக்குத் தனக்கு வரப்போகும் புதிய துயரத்தை அவள் உணர