பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

193


ஒரு யூதாஸ்[1] வழிமறித்தால், அவர்களைக் காட்டிக்கொடுப்பதாகச் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தால், அவனை ஒழித்துக் கட்டத்தான் நான் முனைவேன்! அவனை ஒழித்துக் கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ் மாதிரியே ஆகிவிடுவேன்! அப்படிச் செய்ய எனக்கு உரிமை கிடையாது என்கிறாயா? ஆனால் நம்மை அடக்கியாள்கிறார்களே, நமது முதலாளிகள். - அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? படைபலத்தையும் கொலையாளிகளையும் வைத்திருக்க, சிறைக் கூடங்களையும் விபசாரவிடுதிகளையும் நாடு கடத்தும் இடங்களையும் வைத்திருக்க, தங்களது சுக போகத்தையும் பாதுகாப்பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகலவிதமான கொலைச் சாதனங்களையும் வைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சங்கடத்துக்கு நான் ஆளானேன் என்றால் அது என்னுடைய தவறா? என்னுடைய குற்றமா? இல்லை. நானும் அதை உபயோகிப்பேன். அவர்கள் நம்மை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மாயிருக்கமாட்டேன், நானும் என் கையை ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு உண்டு.... அவர்களில் ஒருவரையேனும் நான் ஒரே போடாய்ப் போட்டுக் கொல்லுவேன். எனக்குப் பக்கத்தில் வரும் பகைவனின் தலையை நான் நொறுக்கத்தான் செய்வேன். மற்றவர்களைவிட, எனது வாழ்க்கை லட்சியத்துக்கு அதிகமான தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் செய்வேன், வாழ்க்கை அப்படி அமைந்துகிடக்கிறது. ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் செய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு நான் விரும்பவும்தான் இல்லை. அவர்களது ரத்தத்தால் எந்தவிதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை; அது வெறும் விருதா ரத்தம். விளைவற்ற ரத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நமது ரத்தம் மட்டும் பூமியில் மழை மாதிரி பொழிந்து கொட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கும்; சத்தியம் அவதாரம் செய்யும்! ஆனால் அவர்களது நாற்றம்பிடித்த ரத்தமோ எந்தவித மச்ச அடையாள மறுக்கள் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப்போய்விடும்! எனக்கு அது தெரியும். இருந்தாலும் இந்தப் பாபத்தை நான் என் தலையில் ஏற்றுக்கொள்கிறேன். கொலை


  1. யூதாஸ் — ஏசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவன். அவரோடு கூடவே இருந்து துரோகம் செய்தவன்.—மொ-ர்.