பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

195


வீசப்போகும் காலம் வரத்தான் போகிறது என்பது எனக்குத் தெரியும், அந்தப் புண்ணிய காலத்தில் உலகத்தில் சுதந்திர மனிதர்கள் நிறைந்திருப்பார்கள், அந்த மனிதர்கள் தமது சுதந்திரத்தால் பெருமை அடைவார்கள். சகல மக்களின் இதயங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும், அந்த இதயங்களில் பொறாமை இருக்காது; பகைமையைப் பற்றிய அறிவுகூட இருக்காது. அப்போது வாழ்க்கை என்பது மனித குலத்துக்காக மகத்தான சேவையாக மாறிவிடும்; மனிதனது உருவம் மகோன்னதச் சிகரத்தில், வானத்தை முட்டும் கொடுமுடிவரையில் உயர்ந்து சென்று கொலு அமரும். ஏனெனில் சுதந்திர புருஷர்களுக்கு எந்தச் சிகரமும் எந்த உயரமும் எட்டாத தூரமல்ல; தொலைவல்ல. அப்போது, மக்கள் அனைவரும் அழகின் பொருட்டு சத்தியத்தோடு, சுதந்திரத்தோடு வாழ்வார்கள். உலகத்தைத் தங்களது இதயங்களால் பரிபூரணமாக அதிகப்படியாகத் தழுவி, அதனை முழுமனத்தோடு காதலிப்பவர்களே அந்த மனிதர்களில் மகோன்னதப் புருஷர்களாக விளங்குவார்கள்; எவர் மிகுந்த சுதந்திரமாக வாழ்கிறாரோ அவரிடமே மகோன்னதமான அழகு குடி வாழ்கிறது. அவர்களே அந்தப் புத்துயிரின்’ புண்ணிய புருஷர்கள்: மகாபுருஷர்கள்!”

அவன் ஒரு நிமிஷ நேரம் மௌனமாயிருந்தான். பிறகு மீண்டும் நிமிர்ந்து நின்றுகொண்டு, தனது ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழும் குரலோடு பேசத் தொடங்கினான்:

“அந்தப் பெரு வாழ்வுக்காக—நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.........”

அவனது முகம் சிலிர்த்து நடுங்கியது, பெரிது பெரிதான கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தோடியது.

பாவெலின் முகம் வெளுத்தது. அவன் தலையை நிமிர்த்தி, தனது அகன்ற கண்களால் அவனைப் பார்த்தான், ஏதோ ஒரு இருண்ட பீதி தன் மனத்தில் திடீரெனக் கவிந்து பெருகுவது மாதிரி உணர்ந்த தாய் திடுக்கிட்டு நாற்காலியை விட்டுத் துள்ளியெழுந்தாள்.

“இதென்ன, அந்திரேய்?” என்று மெதுவாகக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தன் தலையை மட்டும் குலுக்கியசைத்துவிட்டு, உடம்பை விறைப்பாக நிமிர்த்தி நின்றவாறு தாயை ஏறிட்டுப் பார்த்தான். “ஆமாம், என் கண்ணால் பார்த்தேன்....... நானறிவேன்!”

அவள் ஓடோடியும் போய் அவனது கைகளை இறுகப் பற்றினாள். அவன் தனது வலது கையை விடுவிக்க முயன்றான். ஆனால்