பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

195


“அந்த நாயைப்போல். அவளைப்போல் என்னை இதுவரை எவனுமே அவமானப்படுத்தியதில்லை.”

தாய் பேசாது மேஜைப் பக்கமாக வந்து அவனை உட்கார வைத்தாள். அவனருகிலே வந்து அவனது தோளோடு தோள் உரசி ஒட்டிக்கொண்டிருக்க அவளும் உட்கார்ந்துகொண்டாள். பாவெல் வெறுமனே நின்றவாறு, தன் தாடியை உவகையற்று இழுத்து உருவிவிட்டுக்கொண்டிருந்தான்.

“அவர்களுக்கு நம் அனைவரது பெயர்களும் தெரியுமென்றும், போலீஸ் பட்டியலில் நம்முடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன வென்றும், மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்னால் நம்மையெல்லாம் அவர்கள் உள்ளே தள்ளப் போவதாகவும் அவன் என்னிடம் சொன்னான். நான் பதில் பேசவில்லை, வெறுமனே அவனைப் பார்த்துச் சிரித்தேன். ஆனால் என் உள்ளமோ உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு புத்திசாலிப் பையன் என்றும், இந்த மாதிரி வழியில் செல்வது தவறு என்றும், எனக்கு அவன் போதிக்க ஆரம்பித்துவிட்டான், மேலும் நான் இந்த வழியைக் கைவிட்டு விட்டு........”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு, இடது கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான், அவனது கண்களில் ஏதோ ஒரு வறண்ட பிரகாசம் பளிச்சிட்டது.

“எனக்குப் புரிகிறது” என்றான் பாவெல்.

“இதைக் கைவிட்டு விட்டு, நான் சட்ட உத்தியோகம் பார்ப்பது நல்லது என்று சொன்னான் அவன்!” என்றான் ஹஹோல்.

ஹஹோல் தன் முஷ்டியை ஓங்கி ஆட்டினான்.

“சட்டம் நாசமாய்ப்போக!” அவன் பற்களை இறுகக் கடித்தவாறே பேசினான்; “அவன் என் முகத்தில் அறைந்திருந்தால்கூட, எனக்கு - ஒருவேளை அவனுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பயலோ என் இதயத்தில் அவனது நாற்றம் பிடித்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டான்! அந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லை.”

அந்திரேய் பாவெலிடமிருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான்; அதன்பின் கசப்பும் கரகரப்பும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கினான்:

“நான் அவனது முகத்தில் ஓங்கியறைந்துவிட்டு, விலகிப் போனேன். அப்போது எனக்குப் பின்னால், “மாட்டிக் கொண்டாயா?” என்று திராகுனவ் மெதுவாகச் சொல்லியது எனக்குக் கேட்டது. அவன் அந்த மூலையிலேயே காத்துக்கொண்டிருந்தான் போலும்........”