பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

மக்சீம் கார்க்கி


சிறிது நேரம் கழித்து, ரஹோல் மீண்டும் தொடர்ந்து பேசினான்:“நான் திரும்பியே பார்க்கவில்லை. என் மனதில் மட்டும் என்னமோ ஒரு உணர்ச்சி — அடி விழுந்த சத்தத்தை மட்டும் நான் கேட்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தவளையை மிதித்துவிட்ட மாதிரி அருவருப்போடு நான் என் வழியே நடந்தேன். வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஐனங்கள் சத்தம் போட்டுக்கொண்டு வந்தார்கள்.

‘இலாயைக் கொன்றுவிட்டார்கள்’ என்று சத்தம் கேட்டது, என்னால் அதை நம்ப முடியவில்லை. எனது கையில் வலியெடுத்தது; என்னால் வேலையை பார்க்க முடியவில்லை. எனக்கு உண்மையில் வலி இருந்ததா என்பது தெரியாது. இருந்தாலும், என் கை மரத்துத் திமிர்பிடித்துப் போயிற்று....”

அவன் தன் கையை வெறித்துப் பார்த்துக்கொண்டான்.

“என் கையில் படிந்துவிட்ட இந்தக் கறையை என் வாழ்நாள் முழுவதுமே என்னால் கழுவிவிட முடியாது........”

“ஆனால் உன் இதயம் பரிசுத்தமாய் இருக்கிறதே!” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

“நான் அதற்காக என்மீது குறை கூறிக்கொள்ளவில்லை; இல்லவே இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் ஹறோல்.

“இந்தச் சம்பவும் அருவருக்கத்தக்க சம்பவம்: இந்த வேண்டாத விவகாரத்தில் நான் சம்பந்தட்டபட்டிருக்க வேண்டாம்”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்று தோளை உலுப்பியபோது சொன்னான் பாவெல். “நீ அவனைக் கொல்லவில்லை, அப்படியே செய்திருந்தாலும்...”

“கேளு, தம்பி! ஒரு கொலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும். அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதென்றால்....”

“எனக்குப் புரியவேயில்லை” என்று பாவெல் அழுத்திக் கூறினான். பின் சிறிது யோசனைக்குப் பின்பு, “அதாவது புரிகிறது, ஆனால் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை”

ஆலைச்சங்கு அலறியது. அதனது அதிகாரபூர்வமான ஆணையைக் காதில் வாங்கிக்கொண்ட ஹஹோல் தலையை ஆட்டியபடி சொன்னான்.

“நான் வேலைக்குப் போகவில்லை.”