பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

5


குடித்துக் கிடப்பார்கள். அவர்கள் உழைத்து உழைத்து மிகவும் ஓய்ந்து போனவர்களாதலால், குடித்தவுடனேயே போதை வெறி உச்சிக்கு ஏறிவிடும். அவர்களது இதயங்களில் ஏதென்றறியாத எரிச்சல் குடிகொண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக, சிறு சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அந்நேரத்தில் அவர்கள் சீக்கிரமே உணர்ச்சி வசப்பட்டு, ஒருவரையொருவர் மிருகத்தனமான மூர்க்க வெறியோடு கட்டித் தழுவி உருண்டு புரள்வார்கள். இதனால் ரத்தக் காயங்கள் காணும் சண்டைகள்தான் கண்ட பலன். சமயங்களில் அந்த காயங்கள் படுகாயமாய்ப் போவதுண்டு. சில வேளை கொலைகளே நிகழ்ந்துவிடுவதுமுண்டு.

அவர்களது மனித சம்பந்தத்தை மறைமுகமான குரோத உணர்ச்சி ஆக்கிரமித்திருக்கும்; அவர்களது தசைக் கோளங்களின் தளர்ச்சியை எப்படி ஈடுசெய்து முறுக்கேற்ற முடியாதோ அது போலவே இந்த உணர்ச்சியும் வெகுநாட்களாய் ஊறி உறைந்து போயிருக்கும், அவர்கள் பிறக்கும் போதே இந்தத் தீய உணர்ச்சியும் அவர்களோடு பிறந்து ஓர் இருண்ட நிழலைப்போல், அவர்கள் சாகிற மட்டும் அவர்களைத் தொடர்ந்து செல்லும்; இலக்கற்ற, வெறுக்கத்தக்க கொடுஞ் செயல்களுக்கே அவர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும்.

விழா நாட்களில், இளைஞர்கள் வெகு நேரங்கழித்து அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். திரும்பும்போது அவர்களது துணிமணிகள் எல்லாம் கிழிந்து தும்பு தும்பாகி புழுதியும் சேறும் படிந்திருக்கும். சமயங்களில் அவர்கள் தமது தோழர்களுக்குத் தாம் கொடுத்த அடிகளைப் பற்றி வாய்வீச்சு வீசி வீறாப்புப் பேசுவார்கள்; சமயங்களில் தங்களது குடிவெறியை, பரிதாப நிலையை, இழி நிலையை, கசந்த வாழ்வை, அவமானத்தை எண்ணி அழுவார்கள். சீறியெழுவார்கள் அல்லது சோர்ந்து போவார்கள். சமயங்களில் எங்கோ ஒரு வேலிப்புறத்தின் நிழலிலாவது, சாராயக்கடையின் தரையிலாவது போதை மயக்கத்தில் கிடக்கும் தம் மக்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பெற்றோர்கள் வீடு கொண்டு வந்துச் சேர்ப்பார்கள்: வீடு வந்து சேர்ந்த பிறகு முதியவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள், அந்த இளைஞர்களது தொளதொளத்துப்போன உடம்பைக் குத்துவார்கள். பிறகு அவர்களை ஏதோ ஒரு அன்புடன் படுக்கையில் பிடித்துத் தள்ளித் தூங்கவைப்பார்கள். அதிகாலையில் அலறும் ஆலைச்சங்கின் கோபாவேசமான கூச்சலைக் கேட்டு எழுந்திருந்து வேலைக்குச் செல்ல வேண்டுமே என்பதற்காகவே இவ்வாறு செய்வார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளைச் சரமாரியாக உதைப்பார்கள். திட்டுவார்கள்; என்றாலும் இளைஞர்கள் குடிப்பதோ சண்டை சச்சரவு