பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

203


வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன், பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம். நிலக்கரியை எரித்து தார் எண்ணெய் வடிக்கிறோம். இங்கே சம்பாதித்ததில் அங்கே கால்வாசிதான் சம்பாத்தியம். வேலையோ இரண்டு மடங்கு கஷ்டம்! ஹூம்! எங்களை உறிஞ்சித் தீர்க்கிறாளே நிலச்சுவான்தார் —அவனிடம் நாங்கள் ஏழுபேர் வேலை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள். இளவட்டங்கள். என்னைத் தவிர மற்றவரெல்லாம் உள்ளூர் ஆட்கள். எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரியும். அவர்களில் ஒருவன் பெயர் எபீம். அவன் கொஞ்சம் தலைக்கனம் பிடித்த பயல், அவனோடு மாரடிப்பது எப்படி என்பது பெரிய பிரச்சினை!”

“உங்கள் வேலையெல்லாம் எப்படி? அவர்களோடு நமது கொள்கையை நீங்கள் விவாதிப்பதுண்டா?” என்று ஆர்வத்தோடு கேட்டான் பாவெல்.

“நான் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கவில்லை. ஆமாம். நீயும் தெரிந்துகொள். நீ கொடுத்த பிரசுரங்கள்— முப்பத்திநாலா? அத்தனையும் என் வசம் இருக்கின்றன. ஆனால், நான் பிரச்சாரம் செய்வதெல்லாம் பைபிளைத்தான். பைபிளிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பெரிய புத்தகம்; மேலும் அரசாங்கச் சார்புள்ள புத்தகம். பாதிரி சைனாடின் அங்கீகாரம் பெற்ற புத்தகம். அதில் யாரும் லகுவில் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினான்.

“ஆனால். அதுமட்டும் போதாது. நான் உன்னிடம் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு போகத்தான் வந்தேன். என்னோடு எபீமும் வந்திருக்கிறான். அவர்கள் எங்களை ஒரு வண்டி தார் எண்ணெயைக் கொண்டுபோகச் சொன்னார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்குப் பக்கமாக வந்தோம்; வந்து சேர்ந்தோம், சரி., எபீம் வருவதற்குள் நீ எனக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடு. அவனுக்கு இந்த விஷயமெல்லாம் ரொம்பத் தெரியக்கூடாது.”

தாய் ரீபினையே பார்த்தாள், அவனது ஆடையணிகளின் மாறுதல்களைத் தவிர வேறு ஏதோ முறையிலும்கூட அவன் மாறிப்போயிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அவனது பாவனைகூட முன்னை மாதிரி அழுத்தமுடையதாக இல்லை. கண்களில் ஏதோ கள்ளத்தனம் நடமாடியது, முன்னைப்போல் அவை விரிந்து நோக்கவில்லை.