பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

209


அவன் தன் கையை உயர்த்தி, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி, தெளிவோடு அழுத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தான்:

“மரணம்தான் மரணத்தை வெல்லும்! அதாவது மக்களை மறுவாழ்வு எடுக்கச் செய்வதற்காக, மக்கள் சாகத்தான் வேண்டும். பூமிப் பரப்பிலுள்ள லட்சோப லட்சமான மக்கள் புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு வாழ்வதற்காக, நம்மில் ஆயிரம் பேராவது சாகத் தயாராயிருப்போம்! அதுதான் சங்கதி! மக்களின் புனர்ஜென்மத்துக்காக, விழிப்புப் பெற்ற மக்கள் குலத்தின் எழுச்சிக்காகச் சாவது மிகவும் சுலபம்!”

தாய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்; ரீபினை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது பேச்சின் கனமும் வேகமும் அவளை அழுத்தி நசுக்கிக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்தவுடன் தனது கணவனை ஞாபகமூட்டும் ஏதோ ஓர் அம்சத்தை அவனிடம் காண்பது போலிருந்தது. அவளது கணவனும் இப்படித்தான். தன் பற்களைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பான், தனது சட்டைக் கைகளைச் சுருட்டி விடும்போது, இந்த மாதிரித்தான் கையை வீசிக்கொள்வான். அவனிடமும் இதே மாதிரிதான் பொறுமையற்ற கொடூரம் காணப்பட்டது. அது ஒரு ஊமைக் கொடூரம். ஆனால் இதுவோ ஊமையல்ல. இவனைக் கண்டு, அவளுக்குப் பயும் தோன்றவில்லை.

“நாம் இதைச் செய்யத்தான் வேண்டும்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல், “நீங்கள் எங்களுக்குச் சகல புள்ளி விவரங்களையும் கொடுங்கள். நாங்கள் உங்களுக்காக ஒரு பத்திரிகையை நடத்துவோம்.”

தாய்க்குத் தன் மகனைப் பார்த்ததும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கிச் சிரிப்புப் பிறந்தது. அவள் எதுவுமே பேசாமல் உடை உடுத்திக் கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பிப் போனாள்.

“நல்லது! நாங்கள் உனக்குச் சகல விவரங்களும் அனுப்புகிறோம். வாண்டுப் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும்படியாக, அவ்வளவு எளிமையான நடையில் நீங்கள் புத்தகங்களை எழுதி வெளியிடுங்கள்” என்றான் ரீபின்.

சமையலறையின் கதவு திறந்தது. யாரோ உள்ளே வந்தார்கள்.

சமையலறைப் பக்கம் கண்ணைத் திருப்பிய ரீபின்: “இவன்தான் எபீம்! இங்கே வா எபீம்! இவன்தான் எபீம்! இதுதான், பாவெல்! இவனைப்பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ரீபின்.