பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

மக்சீம் கார்க்கி


பாவெலுக்கு முன்னால் உயரமாகவும் பரந்த முகமும் அழகிய கேசமும் உடையவளாயிருந்த எபீம் நின்றான். சின்னஞ்சிறு கம்பளிக்கோட்டு அணிந்திருந்தான். ஒரு கையில் தன் தொப்பியைப் பிடித்தவாறு. அவன் தன் கண்களைத் தாழ்த்திச் சுருக்கிப் பாவெலைப் பார்த்தான். அவனைப் பார்த்தால் அவன் மிகவும் பலம் பொருந்தியவனாயிருக்கவேண்டும் எனத் தோன்றியது.

“உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கரகரத்த குரலில் கூறினான் அவன். பாவெலோடு அவன் கை குலுக்கிய பிறகு, இரு கைகளாலும் சிலிர்த்து நிற்கும் தன் தலை மயிரைக் கோதி விட்டுக்கொண்டான். பிறகு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்குள்ள புத்தகங்கள் கண்ணில் பட்டதும், அவன் அவற்றை நோக்கி மெதுவாய்ச் செல்ல ஆரம்பித்தான்.

“அவற்றைப் பார்த்துவிட்டான்!” என்று பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் ரீபின். எபீம் திரும்பி ரீபினைப் பார்த்தான், பிறகு புத்தகங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“படிப்பதற்கு எவ்வளவு விஷயம் இருக்கிறது” என்று வியந்து கூறினான் அவன். “ஆனால் உங்களுக்குப் படிப்பதற்கு நேரமே கிடையாது. நீங்கள் மட்டும் கிராமத்தில் வாழ்ந்தால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்......”

“ஆமாம். நிறைய நேரம். குறைய ஆசை! இல்லையா?” என்றான் பாவெல்.

“ஏன்?அங்குப் படிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம்தான்” என்று தன் மோவாயைத் தடவி விட்டவாறு சொன்னான் அந்தப் பையன். “அங்குள்ள மனிதர்களும் தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘புவிஇயல்’ இதென்ன புத்தகம்?”

பாவெல் விளக்கினான்.

“எங்களுக்கு இது தேவையில்லை” என்று கூறிக்கொண்டே அந்தப் பையன் அந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்துவிட்டான்.

“பூமி எங்கிருந்து வந்தது என்பதைப்பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது” என்று உரத்த பெருமூச்சுடன். பேசத் தொடங்கினான் ரீபின், “அது கைக்குக் கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி. அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப்பற்றியும் தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற்றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றுதான்.