பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மக்சீம் கார்க்கி


செய்வதோ அவர்களுக்குத் தவறாகப்படுவதில்லை. தந்தைமார்கள் இளைஞர்களாயிருந்த காலத்தில் அவர்களுந்தான் குடித்தார்கள், சண்டையிட்டார்கள், அவர்களது பெற்றோர்களும் பதிலுக்கு அவர்களை உதைக்கத்தான் செய்தார்கள். வாழ்க்கை அப்படியேதான் பழகிப்போய்விட்டது. சீராகவும் பொதுவாகவும் எங்கோ அது வருஷக்கணக்கில் சேற்றுக் குழம்பாக ஒடிக்கொண்டிருந்த பழைய காலத்துப் பழக்க வழக்கங்களுடன் இறுகப் பிணைந்து நாள்தோறும் ஒரே மாதிரியான சிந்தனையும் செயலுமாய் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வாழ்வில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்த எவருமே விரும்பவில்லை.

சில சமயங்களில் வேறு பிரதேசங்களிலுள்ள மக்கள் அந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கு வருவதுண்டு. அந்த இடத்துக்குப் புது ஆசாமிகள் என்ற காரணத்தால் இங்குள்ளவர்களின் கவனத்தை ஆரம்பத்தில் அவர்கள் கவர்வதுண்டு. அவர்கள் வேலை பார்த்துவரும் இடங்களைப்பற்றிய அதிசயக் கதைகளைச் சொல்லும்போது இங்குள்ளவர்களுக்கு அதில் லகுவில் ஈடுபாடும் ஏற்படுவதுண்டு, ஆனால், அந்தப் புதுமை சீக்கிரத்திலேயே போய்விடும். அந்த மனிதர்களும் இவர்களுக்குப் பழகிப் போய்விடுவார்கள்; பிறகு அவர்களைக் கவனிப்பதைக்கூட இவர்கள் நிறுத்திவிடுவார்கள். புதிதாக வருபவர்கள் சொல்லுவதிலிருந்து இவர்களுக்கு ஒரே ஒரு உண்மை புலப்படும். தொழிலாளிகளின் நிலைமை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதுதான் அது. இதுதான் உண்மையென்றால், பிறகு எதைப்பற்றி, என்ன பேசுவது?

ஆனால், அந்தப் புதிய மனிதர்களில் சிலர் இந்தக் குடியிருப்பு மக்கள் இதுவரை கேட்டிராத புது விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆட்சேபிக்காமல் நம்பிக்கையின்றி அவற்றைக் கேட்பார்கள், சிலருக்குக் குருட்டுத்தனமான கிளர்ச்சியை அவை உண்டாக்கும். சிலருக்கு லேசான இதய அதிர்ச்சியைத் தரும். சிலருக்கோ அடையாளமே தெரியாமல் மங்கித்தோன்றும் ஒரு சிறு நம்பிக்கை மனத்தில் எழும்பிக் குறுகுறுக்கும். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களது வாழ்க்கையை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கிடக்கூடிய அந்த வேண்டாத உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மறக்கடித்து விரட்டுவதற்காக மேலும் மேலும் குடித்துத் தீர்ப்பார்கள்.

அந்தப் புதிய ஆசாமிகளில் யாரேனும் ஒருவரிடம் அவர்கள் ஏதாவது ஒரு புதுமையைக் காண நேர்ந்தால், அதை அந்தத் தொழிலாளர்கள் மறக்கவே மாட்டார்கள். தம்மைப் போலில்லாத அந்த