பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

மக்சீம் கார்க்கி


பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான். “நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே. அவன் இதயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும். ரீபின் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு வாயெழவில்லை. அவன் இந்த மனித ராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனித குலத்திடமே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா சொன்னது ரொம்ப சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது!”

“நானும் அதைக் கவனித்தேன்’ என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல். “ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்று திரண்டு கிளர்ந்தெழுந்தால். எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்; அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடுவார்கள்.”

அவன் மெதுவாகவே பேசினான்; அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தாய் வந்து அவனது தோளைத் தட்டிக்கொடுத்தாள்.

“தைரியமாயிரு, அந்திரியூஷா’ என்றாள் தாய்.

‘கொஞ்சம் பொறு, அம்மா’ என்று மிகுந்த பரிவோடு கூறினாள் அவன். திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சியோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக்கொண்டே பேசினான்: “அது. உண்மைதான் பாவெல்! முஜீக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தைத் தரிசாகவே போட்டுவிடுவான். கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப்போல, சகலவற்றையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, தான்பட்ட சிரமத்தின் வடுக்களையெல்லாம் தூர்த்துத் துடைத்துவிடுவான்!”

“அதன் பின் அவன் நம் வழிக்கு வந்து சேருவான்’ என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“ஆனால் அந்த மாதிரி நடக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை. அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப்பிடிப்பது நமது வேலை. மற்றவர்களை விட, நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்புவான், பின்பற்றுவான்.”

“ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்’ என்றான் பாவெல்.