பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217

மக்சீம் கார்க்கி


“அந்தப் பேச்சை விடு, நிகலாய்” என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல்.

‘நான் நினைத்தேன்’ என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய். ‘உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?”

அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.

‘இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர, வேறு எதற்கும் நான் லாயக்கில்லை’ என்று தன் தோளைச் சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய், ‘நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் என் இடம் எது என்று. ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எல்லாம் பார்த்து. அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு ஊமைப்பிறவி.’

அவன் டாவெலிடம் திரும்பினான்; உடனே தன் கண்களைத் தாழ்த்தி, மேஜையையே துளைத்துவிடுவது போல் வெறித்துப் பார்த்தான். பிறகு அவனது இயற்கையான குரலுக்கு மாறான மதலைக் குரலில் பேசத் தொடங்கினான்.

“தம்பி, எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு. இந்த மாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு. இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்துவிடாது எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு.’

பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.

“சரி. தருகிறேன்.’

இடையிலிருந்த மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.